விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
எதுக்கு கையில் கத்தை கத்தையாக கரன்சியோடு போய் ரிஸ்க் எடுக்கறீங்க? அதுக்கு பதிலா ஒரு கிரெடிட் கார்டு வாங்கிக்க வேண்டியதுதானே...?
_ வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு இப்படித்தான் சாதுவாக ஆரம்பமானது!
அதுவே விரிவடைந்தபோது, பர்ஸில் குறைந்தபட்சம் ஆறு கிரெடிட் கார்டுகள் இருப்பதே சமூகத்தில் அந்தஸ்து என்றானது! ஒரே வீட்டில் குடும்பத் தலைவரைத் தவிர, மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் தனித்தனி கார்டு என்று வளர்ந்தது. ஆளாளுக்கு கார்டைத் தேய்த்து செலவு செய்ய, மாதக் கடைசியில் வங்கியிலிருந்து ஸ்டேட்மென்ட் வரும்போது, அதற்கான பணம் செலுத்த வேண்டியவர் விழி பிதுங்கி நிற்க வேண்டியதாகிறது. பாக்கியை வசூலிக்க உருட்டுக் கட்டையோடு அடியாட்கள் வர, தலைமறைவானவர்கள்கூட உண்டு!
பிளாஸ்டிக் கடவுள் நாடகத்தில், கிரெடிட் கார்டுகளின் சாதக, பாதகங்களை விரிவாக அலசியிருக்கிறார் சி.வி.சந்திரமோகன். கிரெடிட் கார்டு பக்கமே தலைவைத்துப் படுக்காமலிருந்த ஹீரோவின் கையில், வலுக்கட்டாயமாக ஒரு கிரெடிட் கார்டையும், அவர் மனைவியிடம் ஒரு ஆட் ஆன் கார்டையும் திணித்துவிட, அந்தக் குடும்பமே கிட்டத்தட்ட மூழ்கிவிடும் நிலை. வேண்டப்பட்டவர்கள் பலரும் உதவிக்கு வர, ஒரு வழியாக கிரெடிட் கார்டுகளின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்கிறார் கதாநாயகன்! ஆக, டஜன் கணக்கில் பிளாஸ்டிக் அட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்காமல், அவசர ஆபத்துக்கு ஒரேயொரு கிரெடிட் கார்டு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்பது, இந்த நாடகத்தில் சொல்லப்படும் மெஸேஜ்.
யுனைடெட் விஷுவல்ஸ் குழுவினரால் நடிக்கப்பட்ட இந்த நாடகத்தை மேடையில் பார்க்கும்போது கிடைத்த அதே எஃபெக்ட், இப்போது நூல் வடிவில் படிக்கும்போதும் கிடைக்கிறது. அசத்தலான சம்பவங்களாலும், அழுத்தமான வசனங்களாலும் கிரெடிட் கார்டுகள் பிளாஸ்டிக் கடவுளாக விஸ்வரூபம் எடுத்து நிற்பதை உணரலாம். இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் இனி கிரெடிட் கார்டை பயன்படுத்துவதற்கு முன், ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பார்கள்!