விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
தான் வாழ பிறரைக் கெடுக்காதே என்ற வாக்கியத்தை நம்மில் பலர் கேட்டிருக்கிறோம். முண்டியடித்துக்கொண்டு முன்னேறுவதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ள நிலையில், இதுபோன்ற வாக்கியங்கள் உதட்டளவில் நின்று விடுகிறது.
அண்ணன் எப்போ போவான்; திண்ணை எப்போ காலியாகும் என்று எண்ணிக் கொண்டு, மற்றவரை பள்ளத்தில் தள்ளி, தாம் வென்றுவிட்டதாக அறிவிப்பதற்கு அடிப்படைக் காரணம், நமக்கே தெரியாமல் நம்முள்ளேயே வாழ்ந்து, நம்மை ஆட்டிப்படைக்கும் சுய பச்சாதாபம்தான்!
அவரவர் மனதில் தானாக உருவாகும் சுயபச்சாதாபத்தை பின்னணியாக வைத்துப் பின்னப்பட்டதுதான் சுயம்பு என்ற இந்த நாடகம்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற சுயபச்சாதாபம், அவனை எப்படியெல்லாம் அடிமைப்படுத்துகிறது; அதனால் நாம் பெறும் நன்மை, தீமை, அவமானங்கள்; நம்மை முடக்க முயலும் சுயபச்சாதாபத்தை அடக்கியாள என்ன வழி போன்றவற்றை நாடக வடிவில் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் அழகுற வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் விவேக்சங்கர்.
இசை நாற்காலி எனும் வாழ்க்கை விளையாட்டில் மற்றவரையும் வெற்றிபெறச் செய்து, தானும் வெற்றிபெறும் அவசியத்தை உணர்த்தியிருக்கிறார்.
இந்த நாடகம் உளவியல் பேசும் சமூக நாடகம். நாளும் நம்மிடையே நடக்கும் பொதுவான அலுவலக சம்பவங்களை, உரையாடல்களாகக் கொண்டிருக்கிறது.
நல்லமனம் கொண்ட மனிதனும்கூட, சந்தர்ப்ப சூழ்நிலையால்தான் சுயபச்சாதாபத்துக்கு பலியாகிறான். அதனை விட்டொழித்து, அதிலிருந்து மீண்டுவர சில வழிகளையும் இந்த நூல் காட்டுகிறது.