உள்ளுணர்வுக் கதைகள் என்று அழைக்கப்பெறும், 15 சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. படிக்கப் படிக்கச் சிந்தனையைத் தூண்டும் விதத்தில், ஒவ்வொரு கதையும் அமைந்துள்ளது. சிறுவர்கள் விரும்பிப் படிக்கவும், நல்ல வழியில் சிந்தனையை வளர்க்கும் படியான கதைகளைக் கொண்டிருப்பது சிறப்பு. அஃறிணையிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அந்தப் பூனைகளின் குடும்பம், கொசு தர்மம் போன்ற கதைகள் உணர்த்துகின்றன.
அன்பு என்ற கதை, பாட்டி எப்படிச் சொல்லாமல் சொல்லி மனிதர்களுக்குப் பாடம் கற்பிக்கிறாள் என்பதைக் காட்டுகிறது. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பதை விளக்கும், வித்தியாசமான பார்வையை, விகாஸ் ஏன் சாப்பிடவில்லை என்ற கதை உணர்த்துகிறது.
வகுப்பாசிரியை அர்ச்சனா, தன் பிள்ளைகளாகக் கருதித் தன் வகுப்பு மாணவர்களுக்காக வேண்டிக் கொள்ளும் பாணி, புதிய கோணத்தில் அமைந்த வித்தியாசமான கதை. இவை போன்ற பல சிறுகதைகள், சிறுவரிடையே நல்லெண்ணத்தை வளர்க்கும் நல்ல விதைக் கதைகள். நல்ல படிப்பினை ஊட்டும் இச்சிறுகதைகளைப் படைத்த, சுவாமி விமூர்த்தானந்தர் பாராட்டுக்குரியவர்.
இராம.குருநாதன்