எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், வரலாற்றின் வடுக்கள், நம் ஊர்களின் மீது இருக்கத் தான் செய்கின்றன. அவை நமது பாரம்பரியச் சிறப்புகளின் அத்தாட்சிகள் என்றும் கூறலாம். வரும் தலைமுறையினர், நம் இன வரலாற்றை, வாழ்விட வரலாற்றுச் சிறப்புகளை அறிய வேண்டமாயின் நடுகல், ஓவியம், கோவில், ஆறு, ஆண்ட அரசர் வரலாறு என, மிகுந்த கள ஆய்வுகளால் வெளிக் கொணரப்பட்ட செய்திகளைத் தொகுத்து, இதுபோன்ற நூல்களாக்கி வைக்க வேண்டும்.
இந்நூலில், ஐம்பது ஊர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் விவரிக்கப் பெற்றுள்ளன. விழுப்புரம் பெயர் விளக்கம் அரிய தகவல். குவாகம், சேந்தமங்கலம், தியாகதுருகம், திருவெண்ணெய்நல்லூர், பனைமலை, சிங்கவரம், ஜம்பை, செஞ்சி, தளவானூர் பற்றி எண்ணற்ற வரலாற்றுத் தகவல்கள் மற்றும் ‘எண்ணாயிரம்’ என்னும் ஊரின் சிறப்புச் செய்திகள், இதுவரை பலரும் கேள்விப்பட்டிராத அருஞ்சிறப்பு உடையவை எனலாம்.
கவுதமநீலாம்பரன்