முன்னோர் தம் அனுபவத்தால் எளிமையாகவும், சுருக்கமாகவும், அனைவருக்கும் பயன்படும் வகையில் கூறிய பழமையான சொற்றொடர்களே பழமொழிகள். மனதில் எளிதில் பதிய வைத்துக் கொள்ளும் அறிவுரைகளாகவும் அவை இருக்கும். அவற்றில் உவமைகள் அமைவதும் உண்டு. கால்நடைப் பழமொழிகளின் அமைப்பு முறையையும், பிற கருத்துகளையும் இரண்டு கட்டுரைகளில் ஆசிரியர் விளக்குகிறார்.
பல்லாயிரக்கணக்கான பழமொழிகளில், கால்நடைகளைப் பற்றிய பழமொழிகளை பா.மதுகேசுவரன் தொகுத்தளித்துள்ள முறை நன்று. பசு, காளை, எருமை, ஆடு முதலிய விலங்குகள் பற்றியும், அவற்றோடு தொடர்புடைய பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், உழவு பற்றியும் வழங்கும் பழமொழிகளை வகுத்தும் தொகுத்தும், அகர வரிசைப்படி அளித்துள்ளார். சில பழமொழிகள் தலைப்புக்கேற்ப, மாடு, பசு, பால் மீண்டும் மீண்டும் வருவதையும் பார்க்கலாம்.
கால்நடைகள் பற்றிய பழமொழிகள் மறைமுகமாக, மக்களுக்குக் கூறப்படும் அறிவுரைகளாகவே அமைகின்றன. ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது.
பேரா., ம.நா.சந்தானகிருஷ்ணன்