தமிழ் இசை துறையில், மறக்க முடியாத ஒரு ஆளுமை, ஆபிரகாம் பண்டிதர். திருநெல்வேலி மாவட்டம், சாம்பவர் வடகரை ஊரில் பிறந்து, படித்து, திண்டுக்கலில் பணிபுரிந்து, தஞ்சையில் இறுதி வரை வசித்து, அங்கேயே மறைந்தவர். இசை மட்டுமின்றி, சித்த மருத்துவம், தமிழாசிரியர் பணி, விவசாயம், பாடகர், வீணை, வயலின் கலைஞர், கீர்த்தனை ஆசிரியர், ஓவியர், புகைப்படக் கலைஞர், பதிப்பாசிரியர், ஜோதிட பண்டிதர், கதாகாலட்சேப விற்பன்னர், இசை புரவலர் என, பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் ஆபிரகாம் பண்டிதர். இசை துறையில் அவரது, தலைசிறந்த படைப்பு, அவர் தன் குருநாதர், சுருளிமலை கருணானந்த சுவாமிகள் பெயரில் இயற்றிய, ‘கருணாமிர்த சாகரம்’ என்ற இசை ஆராய்ச்சி நூல்.
மதுரையில் தற்போது வசித்து வரும் இசை ஆய்வாளர் நா.மம்மது, பண்டிதரின் வரலாற்றை, விரிவாக எழுதி உள்ளார். அதோடு, குஜராத் மாநிலம் பரோடாவில் நடந்த அகில இந்திய இசை மாநாட்டிற்கு, பண்டிதர் சென்று வந்தது குறித்து, 1916ம் ஆண்டில், பஞ்சாபகேச பாகவதரால் எழுதப்பட்ட கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளது. படிக்க மிகவும் சுவாரசியமான நடையில், தேவையான வரலாற்று குறிப்புகளுடன், மம்மது எழுதி உள்ளார். 1919ல் மறைந்த, பண்டிதரின் வரலாற்றை, இப்போது தான் சாகித்திய அகாதெமி, முதன் முறையாக வெளியிட்டுள்ளது.
ரிஷபம் என்ற வார்த்தையில் இருந்து ‘ரி’ என்ற மெய்யெழுத்து வருவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. காந்தாரம் என்ற சொல்லின் முதல் எழுத்து ‘க’ என்று வருவதற்கும், தைவதம் என்ற வார்த்தையின் ‘தை’ என்ற முதல் எழுத்து ‘த’ என்று ஆவதற்கும் ஆதாரமில்லை. இதனால், ‘ச ரி க ம ப த நி’ என்ற எழுத்திற்கு காரணம் கற்பிக்க வந்தவர் சொல்லிய காரணம் சரியானதல்ல என்று தோன்றுகிறது.
ஆபிரகாம் பண்டிதர்