இந்திய சுதந்திர போராட்டத்தில், மகாத்மா காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட தமிழ் போராளிகள் அதிகம். அவர்களில், 15 வயதில் பள்ளி படிப்பை விட்டு, துடிப்புடன் சுதந்திர பேராட்டத்தில் ஈடுபட்ட விருதுநகர் தியாகி மு.அய்யாவு வாழ்க்கை பயணத்தை, உயிரோட்டத்துடன் தொகுத்துள்ளார் நூலாசிரியர். தியாகியை பற்றி எழுத தேவையான ஆவணங்களை தேடி படம் பிடித்து பதிவு செய்திருக்கிறார்.
தியாகி அய்யாவு, கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் பலமாக இருந்தாலும், காமராஜர் ஆரம்பித்த வாலிபர் சங்கத்திலும் அங்கம் வகித்தார் என்ற செய்தியின் மூலம், அந்த கால அரசியலில், கட்சி பேதமில்லை என்பது தெரிகிறது.
கடந்த, 1931ல் சென்னையில் கள்ளுக்கடை, ஜவுளிக்கடை மறியலில் ஈடுபட்ட போது சுபாஷ் சந்திரபோஸ், அய்யாவு முதுகை தட்டி கொடுத்து பாராட்டிய நிகழ்வு, நெகிழ்ச்சியின் உச்சம். தியாகியின் பேராட்டம் மிக்க வாழ்க்கை தொகுப்பை படிப்போர் மனதில், கண்டிப்பாக சுதந்திர உணர்வு பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.