இந்நூலில், ஏதிலிகளாக காப்பகத்தில் அடைக்கலமான குழந்தைகளின் எண்ணவோட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொழுகொம்பில்லாமல் இருந்த அரும்புகளாம் பச்சிளம் குழந்தைகளின் படைப்புகள், தமக்குக் கிடைத்த கொழுகொம்பினைப் பற்றி படர்ந்து மணம் வீசுகின்றன.
அக்குழந்தைகளின் அசாத்தியமான நம்பிக்கைகள், அனைத்துக் கதைகளிலும் வெளிப்படுகின்றன. வள்ளுவர் மிகுதியாக கூறிய நட்பு, பல கதைகளில் வரமாகவும், சாபமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘என் வாழ்வில் நான் பட்ட அடிகள் வெடியாக வெடித்தன’ என, ஒரு கதையில் கூறப்பட்டுள்ளது போல், இக்குழந்தைகளின் காயமும், வலியும், மனக்குமுறல்களும், எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் வெளிப்படுகின்றன.
பிஞ்சுகளின் உள்ளத்தில் ரணத்தை ஏற்படுத்திய சமுதாய அவலங்கள், இப்படைப்புகளில் பிரதிபலிக்கின்றன. ‘குழந்தைகளிலிருந்து குழந்தைகளுக்காக’ எனப் பெயரிட்டு எழுதப்பட்டிருந்தாலும், பெரியவர்களுக்கும் மிகப்பெரிய பாடம்.
புலவர் சு.மதியழகன்