நூலாசிரியர்: இரா.சிவராமன்
வெளியீடு: π கணித மன்றம்
09976853439
பக்கம்: 144 விலை:
‘இணையில்லா இந்திய அறிவியல்’ புத்தகம், இந்தியர்களின், அறிவியல் அறிவை விவரிக்க துவங்கும்போதே, ஆச்சரியங்கள் நம்மை கவ்விக்கொள்கின்றன.
ஐரோப்பிய அறிஞர்களின், கணிதம், அறிவியல் கண்டுபிடிப்புகளை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்திய இதிகாசங்கள், அவற்றை போகிற போக்கில், சொல்லிவிட்டு சென்றிருக்கின்றன என்பதை, ஆதாரங்களுடன் விளக்குகிறார் பேராசிரியர்.
இந்தியர்கள், வேதகாலம் என அழைக்கும், கி.மு.1500 – கி.மு.500 காலகட்டத்தில், சமஸ்கிருத மொழியில், செய்யுள், பிரார்த்தனைக்கான சுலோகங்கள் ஆகியவற்றில், அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்தி உள்ளனர். அவற்றை நாம், புரிந்துகொண்டு வெளிப்படுத்த தவறிவிட்டோம் என்கிறார், பேராசிரியர்.
மிகப் பழமையான, ‘பஞ்ச விம்சதி பிராஹ்மணம்’ என்ற பண்டைய இந்திய நூலில், ‘பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு, ஆயிரம் பூமி விட்டத்தைக் கொண்ட தொலைவுக்கு சமம்’ என, இன்றைய அறிவியலின் கருத்திற்கு இணையாக கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்திய அறிவியல் மேதைகளான, ஆரிய பட்டா, பாஸ்கராச்சார்யா, ராமானுஜன் கருத்துகளும் எளிமையாக இந்நூலில், எடுத்துக்
கூறப்பட்டுள்ளது. கி.பி. 498ல், ஆரியபட்டா, ‘பூஜ்யம், ஒவ்வொரு முறை வலப்பக்கம் நகரும் பொழுதும், அந்த எண்ணின் மதிப்பு, பத்து மடங்காக உயரும்’ என, கூறியுள்ளார்.
கி.பி.876ல், இந்தியாவின் குவாலியர் நகரில் கட்டப்பட்ட, விஷ்ணு கோவிலில், பூஜ்யம் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி.683ல், ‘கடபயாதி சங்க்யா’ எனும் ரகசிய மறைக்குறியீட்டு முறையை, ஹரிதத்தா என்ற அறிஞர் ஏற்படுத்தினார் என்ற குறிப்பும் இந்த நூலில் உள்ளது.
சிவபெருமானின், அடி முடி காண முடியாத நிலையை, இதிகாசம் முடிவற்ற நிலை என, விவரிக்கிறது; அதாவது, இன்றைய கணிதத்தில் முக்கிய இடம் வகிக்கும் ‘முடிவிலி’ என்னும் சூத்திரத்தை எளிய கதை வடிவில் சொல்லி உள்ளனர்.
விஷ்ணுவின் வராக அவதாரத்தில், அவர் பன்றி உருவெடுத்து, கடலின் அடியில் இருந்து, பூமியை, தன் மூக்கின் நுனியில் மேலே கொண்டு வருவார். இதில், நாம் கவனிக்க வேண்டிய அம்சம், அந்த பூமி, கோள வடிவில் இருக்கும் என்பதுதான். நவீன அறிவியல் உலகம் கண்டுபிடித்ததை, புராணங்கள் மிக எளிதாக, விவரித்துள்ளன.
பித்தகோரஸ் தியரி, துத்தநாகம் பிரித்தெடுத்தல், அறுவை சிகிச்சை, விமானங்கள் என, அறிவியலின் மிகச் சவாலான விஷயங்களை, முதலில் சொன்னவர்கள் இந்தியர்களே என, ஆணித்தரமாக, ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்நூல். ஆக்கபூர்வமான படைப்பை கொடுத்துள்ள, ‘பை’ கணித மன்றத்தை பாராட்டலாம்.
சரண்யா சுரேஷ்