உலகம் போற்றும் அறநூலாம் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். நாட்டின் தேசிய நூலாக அறிவிப்பதற்குத் தகுதியுடைய திருக்குறளை, பலரும் தத்தம் போக்கில் வெளியிடுகின்றனர். இந்நூலை வெளியிட்டுள்ள இந்த உரையாசிரியர், முதல் நாற்பது குறட்பாக்களை (பாயிரம்) வள்ளுவர் இயற்றவில்லை என, கருதுகிறார்.
திருக்குறளை முப்பால் என்று தான் கூற வேண்டும் என்றெண்ணும் ஆசிரியர், காரணம் கூறாமல் தம் விருப்பப்படி குறட்பாக்களை புதிய முறையில் வரிசைப்படுத்தி, எண்கள் கொடுத்துள்ளார். இந்நூலின் ஆசிரியர், ஒவ்வொரு குறட்பாவையும் அச்சிட்டபின், படிப்போர்க்குத் தெளிவு ஏற்படுவதற்கேற்ப பிரித்தும் எழுதுகிறார். ஆனால், குற்றியலுகரங்களை விலக்கி எழுதுகிறார். அதாவது, சொல்லின் இறுதியில் வரும், ‘உ’ என்ற எழுத்தை ஒதுக்குகிறார். அதனால், படிப்போர்க்கு குழப்பமே ஏற்படும். ஆய்வறிஞர்களுக்கு மட்டுமே இப்பதிப்பு எனில், பிறர் இந்த நூலை வாங்கிக் குழம்ப மாட்டார்கள்.
அன்பிலார் என்பதை, அன்பு இலார் என்றெழுதாமல், ‘அன்ப்இலார்’ என்றும், தமக்குரியர் என்பதை, தமக்கு உரியர் என்றெழுதாமல் ‘தமக்க்உரியர்’ என்றும், அன்பீனும் (அன்புஈனும்) என்பதை ‘அன்ப்ஈனும்’ என்றும் இவ்வாறே தொடர்ந்துள்ள முறை, புலமை பெற்றோர்க்கே புரியாத புதிராக உள்ளது. திருக்குறளும் அதன் கருத்துக்களும் பாமரரையும் சென்று சேர வேண்டும் என்றெண்ணும் நிலையில், இம்முறை தேவையா என்றெண்ண வைக்கிறது. ஆசிரியர் உரசி உரசி உரைத்துப் பார்த்துள்ள முறை புதுமையானது.
பேரா.ம.நா.சந்தானகிருஷ்ணன்