முகப்பு » கட்டுரைகள் » கருத்து களஞ்சியம்

கருத்து களஞ்சியம்

விலைரூ.160

ஆசிரியர் : அசோகா சுப்பிரமணியன்

வெளியீடு: செந்தில் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘அபிப்பிராய வீக்கம்’ எனும் சிந்தனையில், நம் மனதில் உயர்வாக விரிந்துள்ள தலைவர்களை பற்றி எவரேனும் விமர்சனம் செய்தால், விமர்சனங்களை  புறந்தள்ளுவதும், கூறியவரை மறப்பதும் நம் இயல்பு. அவ்வாறு மறக்கப்பட்டவர்களுள் ஒருவர், ‘சுதந்திர பித்தர், அரசியலில் யோக்கியர்’ என,  ராஜாஜியால் பாராட்டப் பெற்ற சிந்தனை சிற்பி, ம.சிங்காரவேலர்.
ரவுலட் சட்டம் எதிர்ப்பு, ஒத்துழையாமை  இயக்கம், சைமன் குழு எதிர்ப்பு, கொடிநாள் போராட்டம் போன்றவை, சென்னையில்  பிரபலமடைய காரணமானவர் என, பல நிகழ்வுகள் இந்த நூலுள் தொகுத்து தரப்பட்டுள்ளன. ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்திய சிங்காரவேலர், தம் வழக்கறிஞர் அங்கியை தீயிலிட்டு பொசுக்கி, நீதிமன்றம் செல்வதை தவிர்த்தார். இந்தியாவில் முதன்முறையாக, மே தினத்தை அறிமுகம் செய்து, இந்துஸ்தான் தொழிலாளர் விவசாய கட்சியை துவக்கி வைத்தார்.
நாட்டிலேயே முதல் மாநகராட்சியாக விளங்கிய சென்னை  மாநகர மன்றத்தில், கடந்த 1925ம் ஆண்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட  சிங்காரவேலர், வரலாற்றில் முதன்முதலில், தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை தெரிந்திருந்த சிங்காரவேலர், மாநகர மன்றத்தில் ஆங்கிலத்திலேயே விவாதம் செய்ய வேண்டும் எனும் எழுதப்படாத அந்த நாளைய நடைமுறையையும்  தகர்த்தெறிந்தார்.
மன்றத்தின் கல்வி நிலைக்குழுவின் தலைவராக விளங்கிய  சிங்காரவேலர், ஆசிய கண்டத்திலேயே முதன்முதலாக மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய மாணவர்களுக்கு நண்பகல் உணவும், கல்வி உதவித்தொகையும் வழங்க ஏற்பாடு செய்தார்.
‘நொட்டோரியஸ் அஜிடேட்டர்’ என, குற்றம் சாட்டப்பட்டு ஆங்கில  அரசு கைது செய்தபோதும், இவரின் வீட்டை கையகப்படுத்தி, ‘லேடி வெலிங்டன்’ பெயரில் கல்லூரி அமைக்க முயற்சித்தபோதும் போராட்ட உணர்வுகளை கைவிடாத சிங்காரவேலர், சமதரும சுயராஜ்யம், பெண் கல்வி, குழந்தைகள்  கல்வித்திட்டம், உயர்தரக் கல்வி, பெண்ணியம், அரசியல், பொதுவுடைமை, பகுத்தறிவு பற்றிய கருத்துகளையும், கட்டுரைகளையும் தமிழில் சண்டமாருதம், புரட்சி, புதுவை முரசு, விடுதலை, திராவிடன் போன்ற இதழ்களிலும்,  ஆங்கிலத்தில் இந்து, அதர்மா, சண்டே அப்சர்வர், சண்டே அட்வகேட் போன்ற இதழ்களிலும் எழுதி வந்தார்.
காந்தியின் தலைமையை ஏற்றபோதும், ஈ.வெ.ரா.,வின் குடியரசு  இதழில் எழுதியபோதும், பவுத்த சமயத்தை சில காலம் தழுவியபோதும், முரண்பட்ட  நேரங்களில் தம் கருத்தை வெளிப்படையாக தெரிவித்தவர். இதுபோன்று அரிய  செய்திகளைப் பல்வேறு தலைப்புகளில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். மேலும், சிங்காரவேலரின் அஞ்சல்தலை வெளிவர, அயராது முயன்ற நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார்.
புலவர்.சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us