கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகய்யர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவருக்கும், காலத்தால் பெரிதும் முற்பட்டவர்களான முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகிய மூவரை, ‘கர்நாடக சங்கீதத்தின் ஆதி மும்மூர்த்திகள்’ என்று குறிப்பிடுவர்.
இம்மூவரும் சீர்காழி, சிதம்பரம் ஆகிய ஊர்களில் வாழ்ந்ததால் சீர்காழி மூவர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த நூலில், முத்துத்தாண்டவர் இயற்றிய, 60 பாடல்களும், மாரிமுத்தாப் பிள்ளை இயற்றிய, 25 பாடல்களும், அருணாசலக் கவிராயர் இயற்றிய, 61 பாடல்களும், மரபு முறை மாறாத இசையமைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.
நூலாசிரியர், திருப்பாம்புரம், சோ. சண்முகசுந்தரம், அனைத்து பாடல்களுக்கும் சுரக்குறிப்பும் விளக்க உரையும், எளிதாக பயிலும் முறையில் கொடுத்துள்ளார்.கையாள்வதற்கு எளிதாக, 146 பாடல்களும் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு தொகுதிகளிலும், மூவரது பாடல்களும் இடம்பெறுகின்றன.
முதல் தொகுதியில் முத்துத்தாண்டவர் வாழ்க்கை வரலாறும், 2ம் தொகுதியில் மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் உள்ளன. பண்ணாராய்ச்சிக் குழு கண்டறிந்த பண்களுக்கு இணையான ராகங்களும், அவற்றின் ஏறு நிரல், இறங்கு நிரல் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல், சென்னை ராயப்பேட்டை, கர்னாடிக் மியூசிக் புக் சென்டரில் கிடைக்கிறது.
– விஜயலட்சுமி சிவகுமார்