இசை ரசிகருக்கு மிகவும் பிடித்தது, கீர்த்தனைகளும், கிருதிகளுமா அல்லது கற்பனையாக ஊற்றெடுக்கும் ஆலாபனைகளும், நிரவல்களும், ஸ்வரங்களுமா?
எடுத்த எடுப்பிலேயே, கீர்த்தனைகளும், கிருதிகளும் தான் எனப் போட்டுடைக்கிறார், வித்யா பவானி சுரேஷ். இவர், சிறந்த நடனக் கலைஞர் மட்டுமல்ல; கர்நாடக இசையில் ஆழ்ந்த அறிவு உள்ளவர்; அதையும் தாண்டி, சிறந்த எழுத்தாளர் என்பதை, இந்த புத்தகத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். ராகத்தின் அமைப்பு, தாளத்தின் அமைப்பு, கீர்த்தனைகளின் அமைப்பை விளக்கும் ஆசிரியர், 50 ராகங்களை, அவை, தாய் ராகமா, தாய் ராகத்திலிருந்து பிறந்த ராகமா என்பதைச் சொல்லி விட்டு, அதன் தன்மையையும் விளக்குகிறார். அந்த ராகத்தில் எழுதப்பட்டுள்ள பிரபல கீர்த்தனைகளைக் கூறி, அவை, எப்படி நடனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் விளக்குகிறார்.
ராகத்தைப் பற்றி குறிப்பு எழுதும்போதும், அந்தந்த பக்கங்களுக்கு, ராகத்தின் தன்மைக்கேற்ற நிறங்களையும் கொடுத்து, படிப்பவர்களுக்கு சலிக்காமல் இருக்க, சங்கீதம் சார்ந்த சில துணுக்குத் தகவல்கள், போட்டிகளையும் வைத்து உள்ளார்.
கர்நாடக சங்கீதத்தை பால பாடமாகப் படிப்போருக்கும், சங்கீதத்தில் தேர்வு எழுதுவோருக்கும் மிகவும் பயனுள்ள நூல்.
பானுமதி