இந்த நூல், கதைகள் மூலம், கணிதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. இரண்டாக பிளந்தாலும், மீண்டும் ஒன்று சேரும் வரம் பெற்ற ஜராசந்தனை, மகாபாரத போரில், பீமன் எவ்வாறு வீழ்த்துகிறான் என்பதை, 2025, 3025, 9801 என்ற எண்களை வைத்து கூறுவதை ரசிக்கலாம். குருசேத்திர போரில் கையாளப்பட்ட, ‘சக்ர வியூகம்’ எத்தகையது என்பதை விளக்கும் கணித முறையும் வியப்பளிக்கிறது. மகர வியூகம், கூர்ம வியூகம், பத்ம வியூகம், கருட வியூகம், வஜ்ர வியூகம் என, மகாபாரத போர், அறிவியல் ரீதியாகவும் செயல்பட்டது என்பதை படங்களுடன் ஆசிரியர் விவரித்துள்ளார். இயேசுவும், பித்தாகரசும், மீன்களின் எண்ணிக்கையை, 153 என, எப்படி சரியாக கூறினர்; கடலில் தோன்றும், ‘காரிப்டிஸ்’ என்ற நீர் சுழற்சியின் தன்மை; குபேர யந்திரத்தின் மாய கூடுதல் மாறிலி, 72 ஆக, ஏன் அமைகிறது; சுக்ராச்சாரியார், மிருத சஞ்சீவனி மூலிகையின் ரகசியத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பது உட்பட, புத்தகம் முழுவதும் ஆச்சரியம் ததும்புகிறது.
– சுரேஷ்