கடந்த, 2007 முதல் 2014 வரை, பல்வேறு இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது. இலக்கியம், சுயமுன்னேற்றம், பயணம், நகைச்சுவை, திரை விமர்சனம், சட்டம் என பல்வேறு துறைகள் குறித்தவை இந்த கட்டுரைகள். நிலாவில் துவங்கி பயணம், நூல், கவிதை, கடற்கரை, திரைப்படம், நண்பர்கள், நட்பு, வேகத்தடை, சிற்றிதழ் என்று பலதரப்பட்ட பாதைகளில் பயணிக்கின்றன கட்டுரைகள்.
‘கவிதையின் நவீன வடிவங்கள் ஹைக்கூவிற்குப் பின்’ என்ற கட்டுரை, நிச்சயம் கவனிக்க வைக்கும் பதிவு. ஹைக்கூ வடிவம் சாமானிய மக்களிடமும், வெகுஜன பழக்கத்திற்கும் சென்ற பின், ‘லிமிரிக்கூ, சென்ரியு, ஹைபுன், லிமர்ப்புன், ரென்கா, சிஜோ, குங்கப்பு, தாண்கா’ என, பல வடிவங்கள் எடுத்துள்ளதையும், ஒவ்வொன்றை பற்றியும் தெளிவாக எடுத்து சொல்லி இருப்பதும் கவனிக்கத்தக்கது; வரவேற்கத்தக்கது.
கட்டுரைகளின் மூலம் நூலாசிரியரின் பன்முக சிந்தனைகளை தெளிவாக அறிய முடிகிறது.
– ஸ்ரீநிவாஸ்பிரபு