அத்திரி, பராசரர் போன்ற முனிவர்கள் கூறியவற்றை சுருக்கி, மந்திரேஸ்வரர் என்ற ஜோதிட வித்வானால், ‘பலதீபிகை’ என்ற இந்த நூல், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. ஜோதிடத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்று, மேலும் பல விஷயங்களைக் கற்க விரும்புவோருக்கு, இது ஒரு, அற்புதமான நூல். 26 அத்தியாயங்களில் ஜோதிட சாஸ்திரம் முழுவதையுமே அலசி ஆராய்ந்து விடுகிறார்.
பல ஜோதிட நூல்களில் காணப்படும் 12 ராசிகள், அவை லக்னங்கள் ஆகும்போது ஏற்படும் பலன்கள், ஒவ்வொரு வீட்டிலும் கிரகங்கள் நிற்கும் பலன், கிரக சேர்க்கைகளின் பலன், பலவித யோகங்களால் ஏற்படும் பலன்கள், விரிவான காலச்சக்கர தசை விவரம், அஷ்டக வர்க்கப் பரல்கள் மூலம் காணும் பலன், தசவர்க்கம், பெண்கள் ஜாதகத்தில் இன்னின்ன ஸ்தானத்தைக் கொண்டு இன்னின்ன பலன்களை கூற வேண்டும் என்ற விவரம், ஆகியவை இந்த நூலில் உள்ளன. மேலும், அவற்றை, பல பிரபல ஜோதிட நூல்களுடன் ஒப்பிட்டுக் காட்டியிருப்பது மிக அருமை.
பாதுகாத்து வைக்கக் கூடிய, இந்த நூலை இன்னும் சற்று உயர்ந்த ரகத்தாளில் கெட்டி அட்டையுடன் வெளியிட்டிருக்கலாம்.
மயிலை சிவா