‘வெறி நகரம்’ என்ற முதல் சிறுகதையே அற்புதம். இந்த சிறுகதை, அதீத நிலைமைகளில், மனித இயல்பு எந்த அளவுக்கு தரம் கெட்டு போகக்கூடும் என்பதை காட்டுகிறது. ‘மயானத் தங்கம்’ – சமூக அநீதி, ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை போன்ற வன்மங்களுடன், நாம் தொடர்ந்து வாழ்ந்து வருவது பற்றிய குற்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். ‘ஜெர்மனியில் ஒரு தாய்லாந்து பெண்’ – மனிதநேயம் மிக்க ஒரு ஜெர்மானியரால், வேசியர் குகை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு, ஒரு கண்ணியமான வாழ்க்கை வாழும், ஒரு பெண்ணை பற்றிய கதை.
‘நூலகத்தில் ஒரு தளபதி’ – சிந்தனையாளர்கள் எப்போதும் அராஜக அரசியலுக்கு ஒரு சவால் என்ற கருத்தை சொல்லும். ‘அடிமையின் கோட்டை’ – ஷேக்ஸ்பியரின், ‘லியர் அரசன்’ நாடகத்தை தழுவி எழுதப்பட்டது. ‘குள்ளநரிகளும், அராபியர்களும்’ என்ற காப்காவின் சிறுகதை, யூதர்களின் அவல நிலையை உணர்த்தும்.
ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சி காலத்தில், முளைவிட்டு கொண்டிருந்த சோசலிச சக்திகளின் உருவகமாகவே, ‘புயற்பறவையின் கீதம்’ சிறுகதையை படைத்துள்ளார் கார்க்சி. சிறுகதை இலக்கிய பொக்கிஷம். மொழிபெயர்ப்பு அருமை.
எஸ்.குரு