‘அன்ன விசாரம் அது விசாரம்’ என்பது பட்டினத்தார் வாக்கு. ஆம், அடுத்த வேளை சோறுக்கு என்ன செய்வது என்பதே பலரது பெரும் கவலை. ‘வேண்டாம் வேண்டாம்; இனி எதுவும் பரிமாறாதே, வயிற்றில் இடமில்லை’ என்று இலைக்கு முன்பு கவிழ்ந்து, முதுகைக் காட்டி கதறும்படி அறுசுவை உணவு படைத்து, அதில் பேரின்பம் பெற்ற பெருமக்களும் நம் நாட்டில் உண்டு. அப்படிப்பட்ட அன்னதானத்தின் சிறப்பைப் பேசுகிறது இந்த நூல்.
அன்னதானத்தின் சிறப்பைப் பற்றி வேத, இதிகாச, புராண, காவிய காலங்களிலிருந்து உபநிஷதங்கள், கீதை, உலக சரித்திர வரலாறு, சங்கத் தமிழ், சைவ, வைணவ ஆகமங்கள், சிந்துவெளி நாகரிக ஆய்வுகள் ஆகியவற்றிலிருந்து, நூற்றுக்கணக்கில் மேற்கோள்களை கொய்து தந்திருக்கிறார். 100 அத்தியாயங்களில், விஷயம் அன்னத்தைப் பற்றியதாகவோ என்னவோ, போதும், போதும் என்று கைகூப்பும் அளவிற்கு சான்றுகளை காட்டி படிப்போரை பிரமிக்க வைக்கிறார் ஆசிரியர். அரிசி அன்னம் பற்றிய பழமொழிகளும், சின்ன அகராதியும் நூலுக்குக் கூடுதல் சிறப்பை அளிக்கின்றன. அசுர முயற்சி. படித்துப் பயன் பெறலாம்.
மயிலை சிவா