நடின் கார்டிமர், நோபல் பரிசு பெற்ற, புகழ்மிக்க தென் ஆப்பிரிக்க எழுத்தாளர். அவர் எழுதிய உலகப் புகழ்பெற்ற நாவல், ‘அப்பாவின் கதை’. இது, நிறவெறி காலனி ஆதிக்க அதிகாரக் கொடுமையை எதிர்த்துப் போராடும் ஆப்பிரிக்க மக்களின் கதை. ஓர் ஆணுக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையில் மலரும் அன்பு; ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் உள்ள அன்பு; ஒரு மனிதனை, அவன் தேசத்தின், இனத்தின் அடிமைத்தளையினை அறுத்தெறிய போராட செய்யும் அன்பு.
இவற்றை அடிநாதமாகக் கொண்டு பிரவாகம் எடுக்கும் அற்புத சிருஷ்டி. அப்பாவின் கதையோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது அம்மாவின் கதை. அப்புறம், அப்பாவின் காதலியின் கதை. இவர்கள் எல்லாரையும், தன் ஆழ்ந்த பார்வையால் பார்க்கும் ஒரு மகனின் கதையும் இதில் உண்டு.
அம்மாவுக்கு, பொது வாழ்க்கையில் எந்த ஈடுபாடும் இல்லை. அவள் வீட்டைப் பார்த்துக் கொண்ட மனைவியாகவே இருந்தாள். ஆனால் அப்பாவோ, கூட்டங்கள் திரண்டு கோஷித்து வாழ்த்தும் அரசியல்வாதி. அந்தப் போராளியின் போராட்ட வாழ்க்கை தான், அப்பாவின் கதை. நாவல் இலக்கிய பொக்கிஷம்.
–
எஸ்.குரு