இது, தமிழ்மகனின் நான்காம் சிறுகதைத் தொகுதி. எட்டாயிரம் தலைமுறை (2008), சாலை ஓரத்திலே வேலையற்றதுகள் (2006), மீன்மலர் (2008), அமரர் சுஜாதா (2013), மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் (2014). பாத்திரங்களை இவர் அறிமுகம் செய்யும் பாணி அலாதியானது.
‘நான் நான்காம் வகுப்பு படித்தபோது பார்த்த அந்த முகம் தான், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை மஞ்சு அக்காவுக்கான முகம். அந்த முகத்திற்கு மட்டும் முதிர்ச்சியே இல்லை. பளிச்சென்று துறுதுறுக்கும் முகம் அது. அந்தக் கண்களும், உதடுகளும் இன்னும் பிரகாசமாகவே இருக்கின்றன. தேவைப்பட்ட போதெல்லாம் மனதின் ஆழத்தில் இருந்து மிதந்து மேற்பரப்புக்கு வந்து
பரவசமூட்டுவதாக அது இருக்கிறது’.
புதுமையான கதை சொல்லும் உத்திகள், தமிழ்மகனின் சிறுகதைகளுக்குச் சிறப்புச் சேர்க்கின்றன. இவர் நம் சமுதாயத்தை
அக்கறையுடன் பார்க்கிறார். சில பிரச்னைகளுக்கு தீர்வும் சொல்கிறார். இன்று காதல், தன் புனிதத் தன்மையை இழந்து, மலிவும் பதிப்பாகி விட்டதை, ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக சொல்கிறார்.
‘பிரண்டு வேற, கேர்ள் பிரண்டு வேற, காதல் வேற... மூணுக்கும் வித்தியாசம் இருக்கு’. ‘பத்து ஆண்டுகளுக்கு முன், இப்படி ஒரு கலாசார சூழல் இல்லை. பெண்களை தூரத்தில் பார்த்துக் கிண்டல் அடிப்பது அல்லது காதல் கொள்வது என்ற இரண்டு வகை தான் இருந்தது’ என்று சொல்லும் இவரது அலசல் பார்வை, நம்மை அசத்துகிறது.
வர்ணனையில் ஒரு சிக்கனம், ஒரு நேர்த்தி. ‘தெரு அடங்கும் இரவு. வீட்டு விளக்குகள் அணைக்கப்பட்டு தெரு விளக்கு வெளிச்சத்தில் பெருச்சாளிகள் பவனி வரும் நேரம். பதினோரு மணிக்கு மேல் இருக்கும்...’
‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்றார் பாரதியார். ஆனால், இன்றும் பெண்களை இழிவு செய்யும் கொடுமை தொடர்கிறது, ‘மணமகள்’ என்ற சிறுகதையில். மணமகன் யாரென்றே தெரியாமல், மணமேடையில் அமர்ந்து இருக்கிறாள் ஒரு மணப்பெண்.
விடிந்தால் கல்யாணம். இந்த நேரத்தில், இப்படி ஒரு திண்டாட்டம். தாம் கழுத்தை நீட்டப் போவது யாருக்கு என்று அவளுக்கு தெரிவிக்கப்படவே இல்லை. மணமகன் யாரென்று கேட்பது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்குமோ என, சில நாளும், அட... அதுகூட தெரியாமத்தான் கழுத்த நீட்டப்போறீயா என்று கேலி பேசுவர் என்று சில நாளும், தவித்துக் கொண்டிருக்கிறாள்.
கசப்பான பல உண்மைகளை சொல்லும் இவரது கதைகள், நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ள தூண்டும். தமிழ்மகன் ஒரு போராளி. நாளைய உலகம் நல்லதாய் அமைய வேண்டும் என்று போராடுகிறார், சக எழுத்தாளர்களைப் போலவே.
எஸ்.குரு