தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர், தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்திருக்கிறார் இந்த நூலின் மூலம்.
ஒரு திரைக்கதாசிரியராக, உதவி இயக்குனராக எத்தனை போராட்டங்களைச் சந்தித்து, இயக்குனராக வேண்டியிருந்தது. அதன்பின் அந்தப் புகழைத் தக்க வைத்துக் கொள்ள, எத்தனை போராட வேண்டியிருந்தது என்று சினிமாவைத் தாண்டிய பல விஷயங்கள் நூலில் அடங்கியிருப்பது, திரைத்துறையில் வெல்வதற்கு போராடும், உதவி இயக்குனர்கள் பலருக்கான படிப்பினை நிறைந்தது;
உந்துசக்தியைத் தரக் கூடியது. ‘பத்ரகாளி’ என்கிற திரைப்படம் பாதி வளர்ந்த நிலையில், கதாநாயகி ராணிசந்திரா, ஒரு விமான விபத்தில் இறந்துவிட, எப்படி மீதிப்படத்தை அவர் முடித்தார் என்பதை விவரித்திருப்பது, நாவல் படிப்பது போன்ற விறுவிறுப்பைத் தருகிறது.
ஏ.வி.எம்., தனக்கு பணம் தரவில்லை என, எம்.ஆர்.ராதா சொல்ல, திருலோகசந்தர் இருதரப்பிலும் பேசி, தவறு எங்கு நடந்தது என்பதைக் கண்டறிந்த சம்பவத்தை விவரித்திருப்பது, சினிமாத் துறையின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்துகிறது. திரைப்பட ஆர்வலர்கள், அவசியம் படிக்க வேண்டிய நூல்.
-பாலகணேஷ்