‘பொருள் தான் மூல முதல்; அதிலிருந்தே உணர்வு தோன்றியது’ எனும் பொருள்முதல் வாதிகளுக்கும், ‘உணர்வு தான் (கருத்து அல்லது ஆன்மா) மூலமுதல்; அதிலிருந்து தான் எல்லாம் தோன்றின’ எனும் ஆன்மிகவாதிகளுக்கும் இடையிலான தத்துவப் போராட்டங்களை, வரலாற்றுப் பின்னணியில் ஆய்வு செய்து, கி.பி., 18ம் நூற்றாண்டு வரையிலான, வடமாநில பக்தி இயக்கம், தமிழக பக்தி இயக்கங்களின் பண்புகளை ஆய்வு செய்து, முடிவு பெறாத, கருத்தியல் போராட்டங்களை முன்வைத்துள்ளார் நூலாசிரியர்.
தமிழர் வளர்த்த, பொருள் முதல்வாத தத்துவங்கள், கி.பி., 9, 10ம் நூற்றாண்டுகளில், இறையியல் தத்துவங்களாக வளர்ச்சியுற்ற பின், சமஸ்கிருதமும், பிராமணியமும், கடந்த நூற்றாண்டுகளில் தமிழர் வளர்த்த தத்துவங்களை சிதைத்து அழித்தன என கூறும் நூலாசிரியர், தொல்காப்பியர், வள்ளுவர், சித்தர்கள் காலவரிசையில் ஆய்வு செய்துள்ளார்.
‘வேதம் மனிதரால் செய்யப்பட்டதே; சுயம்புவானது அல்ல’ (பக்.97) என்ற நீலகேசியின் வாதம், ‘சமணத்தையும், பவுத்தத்தையும் வீழ்த்த பிராமணிய மதங்கள், அரசு அதிகாரத்தைப் பெருமளவு பயன்படுத்திக் கொண்டன’ (பக்.114). ‘கோவில்கள் அரசு அதிகாரத்தின் மையமாகவும், விவசாயிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்து விவசாயிகளை சுரண்டும் நிறுவனமாகவும் உருவாக்கப்பட்டன’ (பக்.203).
பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகளை, மிக வித்தியாசமான கோணத்தில் வரலாற்றுப் பின்னணியில் ஆய்வு செய்து நூலாசிரியர் நிறுவ முற்பட்டுள்ள தத்துவங்கள் சிந்தனைக்குரியவை. மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட தமிழர் வளர்த்த தத்துவங்களை, பல சான்றுகளுடன் நிறுவ முற்பட்டுள்ள ஆசிரியரின் சமூக ஆர்வத்தைப் புலப்படுத்தும் நூல் இது.
பின்னலூரான்