பிரெஞ்சு இலக்கியம், உலக இலக்கியத்திற்கு பற்பல கொடைகள் அளித்துள்ளது. அதன் முதல் வரிசையில், ‘மேடம் பவாரி’ இடம்பெறும்.
கதாநாயகி எம்மா, கள்ளக் காதலிலும், ஆடம்பர வாழ்க்கையிலும் ஈடுபட்டு, இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால், தன் மனைவி நெறி தவறியவள் என்று தெரிந்து கொண்ட பிறகும், எம்மாவின் கணவர், அவளை மனதார நேசிக்கிறார். அவள் இறந்த பிறகும், அவள் உயிரோடு இருந்தபோது நேசித்ததை விட அதிகமாக நேசித்து, அவள் நினைவாகவே உயிர் துறக்கிறார். எம்மாவின் கணவர் தான் உண்மையான கிறிஸ்தவர் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார், குஸ்தாவ் ப்ளாபர். பரமேஸ்வரனின் மொழிபெயர்ப்பு மிக அருமை.
பிரெஞ்சு சிறுகதை மன்னன் மாபசானுக்கு, எப்படி எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த மேதை குஸ்தாவ் ப்ளாபர். மேடம் பவாரி வெளிவந்தபோது, ப்ளாபர், சமுதாயத்தின் ஒழுங்கையும், மத நம்பிக்கையையும் கெடுப்பதாகக் கைது செய்யப்பட்டு,
விசாரணைக்குப் பின், இறுதியில் விடுதலை செய்யப்பட்டார்.
ஒரு எழுத்தாளன், தீர்ப்புக் கூறக்கூடாது; போதனை செய்யக் கூடாது. ஆனால், நடுநிலை வகிக்க வேண்டும் என்பது, குஸ்தாவ் ப்ளாபரின் இலக்கியக் கோட்பாடு.
எஸ்.குரு