இளைய தலைமுறைத் தமிழர்களுக்கு, தங்கள் செழுமையான தமிழ் இலக்கியப் படைப்புகள் பற்றியும், அவற்றிலுள்ள வளமையான வாழ்வியல் கருத்துகள், ஆன்மிகச் சிந்தனைகள், பழுதற்ற பண்பாட்டுச் சுவடுகள், வரலாற்றுப் பெருமிதங்கள், கலை வடிவங்கள், தொன்மங்கள் பற்றியெல்லாம் யாராவது எடுத்துச் சொன்னால் தான் புரியும் என்ற நிலை இன்று நிலவுகிறது.
எந்த மொழியிலும் இதுபோன்ற அரிய கருத்துச் செல்வங்கள் கிடைப்பது அரிது. நமது பண்டைய மரபு முதல், இன்றைய தமிழ்ப் படைப்புகள் வரையிலான பொக்கிஷங்களைச் சுட்டிக்காட்டும் அறிமுகம்தான் இந்த நூல். மூத்த பத்திரிகையாளர், சுப்பு, பல ஆண்டுகளாக முயன்று இந்த நூலைக் கொண்டு வந்துள்ளார். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தமிழ் கருத்துக் களத்தின் பிரபலங்களான, சுகி.சிவம், அ.ச.ஞா., டி.என்.ராமச்சந்திரன், பிரேமா நந்தகுமார், தெ.ஞானசுந்தரம், இந்திரா சவுந்தரராஜன், ஜோ டி குரூஸ், ம.வே.பசுபதி, ஆர்.பி.வி.எஸ்.மணியன், திருப்பூர் கிருஷ்ணன், வ.வே.சு., சாமி.தியாகராஜன், கவிக்கோ ஞானச்செல்வன், சுகா, போன்ற, 90க்கும் மேற்பட்ட அறிஞர்கள், மொத்தம், 108 கட்டுரைகளை அளித்துள்ளனர்.
மொழியினுடைய தொன்மையையும், வெவ்வேறு கால கட்டங்களில் அது தன் தன்மை மாறி புதுப் பொலிவு பூணுவதையும், புதுமையின் ஊடேயும் மரபுகள் பயின்று வருவதையும், இந்த உயிரோட்டத்தில் ஒரு தொடர்ச்சி இருப்பதையும், ஒரே நோக்கில் பார்த்துத் தேர்வு செய்து ஒரு தொகுப்பு நூலாக, இதுபோல வேறு இந்திய மொழிகளில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளதா என்பது ஆய்வுக்குரியது.
தமிழைப் பொறுத்தவரை இதுவே, இந்த வகையில் முதல் நூல் எனலாம். மு.வ., எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, கி.வா.ஜ.,வின் நூல் பட்டியல் போன்றவை இதிலிருந்து வேறுபட்டவை.
நூலின் முதல் கட்டுரை, ‘படி படி... நூலைப் படி’ என்ற சுகி சிவத்தின் கட்டுரை, அற்புதமான வாயில் தோரண வரவேற்பு. அதைத் தொடர்ந்த அடுத்த கட்டுரை, பேரா. அ.ச.ஞானசம்பந்தன் எழுதிய, ‘புதையலைத் தேடி. தமிழ் ஆர்வலர்கள், எந்த வரிசையிலே நூல்களையும், ஆசிரியர்களையும் தேர்ந்தெடுத்துப் படித்தால், தமிழ் வளத்தை அதிகரித்துக் கொள்ளலாம்’ என்று தெளிவுபட எழுதியுள்ளார்.
தொடர்ந்து வரும் கட்டுரைகள் அனைத்துமே ஒன்றிரண்டு பக்கங்கள்தான். என்றாலும் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிகின்றன.
குமரகுருபரர், வள்ளலார், ஆறுமுக நாவலர், ஆனந்தரங்கம் பிள்ளை, வ.உ.சி., – ம.பொ.சி., போன்ற தமிழ்ச் சான்றோரின் வாழ்க்கைக் குறிப்புகள், கடந்த காலத் தமிழ் நாவல்கள், தமிழ்ச் சிறுகதைகள், அறிவியல் நூல்கள், பட்டிமண்டபங்கள் வளர்த்த தமிழ், தமிழ் சினிமாக் கவிஞர்கள் போன்ற பல துறைகளில் கட்டுரைகள், பாரதியார், தேவனிலிருந்து இன்றைய ஜெயமோகன் வரை உள்ள எழுத்துக்களைப் பற்றிய பதிவுகள் இந்த நூலில் பவனி வருகின்றன. சில வித்தியாசமானவை. ஒன்றையேனும் உதாரணத்திற்கு பகிர்ந்து கொள்கிறேன்.
ரெங்கையா முருகன், ஹரி சரவணன் எழுதிய ‘அனுபவங்களின் நிழல் பாதை’ என்ற நூலைப் பற்றி ‘போப்பு’ எழுதிய மதிப்புரையில்
ஒரு பகுதி:
மத்திய வட கர்நாடகாவில் ஆட்டிடையர்களிடையே பயணித்து, அவர்களது சடங்கு முறைகளைப் பதிந்திருப்பது அச்சமும் பிரமிப்பும் ஊட்டுகிறது.
இம்மக்களின் கதைப்பாடல்களையும், திருவிழாவில் நடைபெறும் சடங்குகளையும் விளக்கிக் கொண்டே போகின்றனர்.
பதினெட்டு நாள், அன்னம், தண்ணி எதுவும் இல்லாமல் கொலைப் பட்டினியாக விரதமிருந்த தலைமைப் பூசாரி கொரவா கார்னிகா, நடக்கத் தெம்பில்லாமல் சடங்கிடத்திற்கு தூக்கி வரப் படுகிறார். ஆனால் அம்மனிதன், நேரம் வந்ததும் சடுதியில் இருபதடி கோலில் ஏறுவதும், அந்தரத்தில் அக்கோலில் குப்புறப்படுத்து அந்த ஆண்டிற்கான குறியை, மந்திரம் போல் சொல்வதும், ஐந்து லட்சம் மக்களும்
துளிச் சலனம் இல்லாமல் குறி கேட்பதும், பகுத்தறிவைத் தாண்டிய ஆச்சரியம்தான்.
இதை எழுதும் போதே, காலில் துளையிட்டு இரும்புச் சங்கிலியை நுழைத்து அவர்கள் செய்யும் சரபள்ளிச் சடங்கு முறையைக் கண்டித்த சீர்திருத்தவாதி பசவண்ணாவின் கண்டனத்தையும் அவர்கள் நேர்மையோடு பதிவு செய்துள்ளனர். (பக்.473)
‘செய்தித்தாள்கள், வார இதழ்கள், வருடாந்திர கண்காட்சி வரவுகள் என்ற அளவில், தமிழ்ப்பழக்கம் உள்ளோருக்குத் தமிழின் அகலத்தையும் ஆழத்தையும், இனிமையையும் தொட்டுக் காட்டும் பணி இது.
இந்தியப் பண்பாட்டின் செறிவான அம்சங்களைத் தருகிறது தமிழ் என்பதற்கான உறுதிமொழி இது. ஆயிரம் தமிழ் புத்தகங்களை அண்மைப்படுத்திக் கொள்ளவும், அகப்படுத்திக் கொள்ளவும் இது வழி செய்யும்’ என்ற தொகுப்பாசிரியரின் கருத்தை ஒவ்வொரு கட்டுரையும் நிறுவுகிறது.
பொருளடக்கத்தில் கட்டுரையாளர்கள் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கலாம்; பின்னிணைப்பாக அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பும் சேர்த்திருக்கலாம். கல்வி நிறுவனங்களிலும், நூலகங்களிலும் நிச்சயம் இருக்க வேண்டிய இந்த நூலை, தடித்த அட்டையோடு, நூலக பதிப்பாக கொண்டு வந்திருக்கலாம். இவையெல்லாமே எளிதில் தீர்க்கக் கூடிய குறைகள்; அடுத்த பதிப்பின் போது நினைவில் கொள்ள வேண்டும்.இத்தொகுப்பு நூல், தமிழர் தலைகளை இன்னும் கொஞ்சம் நிமிர வைக்கிறது.
பேராசிரியர் வ.வே.சு.,