அறத்தை, 380 குறள்களாலும், பொருளை, 700 குறள்களாலும் மிக விரிவாகப் பாடிய திருவள்ளுவர், காமத்தை மிக மிக குறைவாக, 250 குறள்களில் பாடினார். புதுமணத் தம்பதியர் இணைந்து படித்து, காமத்துப் பாலை சுவைக்க இந்நூலில், 100 குறள்கள் மட்டுமே எடுத்து விளக்கம் தந்து, படமும் வரைந்து தரப்பட்டுள்ளது.
தம்பதியர் இடையே இருக்க வேண்டிய புரிந்துணர்வு, மனம் ஒன்றிய மாண்பு, ஊடலால் ஆண் அடையும் நெகிழ்வு, கூடலால் பெண் அடையும் மகிழ்வு என்று, புதுமண மக்களுக்குப் புரியாத பல புதிர்களை விளக்கும் (பக்.15) திருவள்ளுவரின் மந்திரக் குறளுக்கு, மயக்கம் தெளிவிக்கும் உரை எழுதியுள்ளார்.
‘கண்டுகேட்டு உண்டு உயிர்த்து’ (குறள் – 1101) எனும் குறளுக்கு, ‘அவளது மேனியைத் தழுவும்போது ஏற்படும் மின்சார பரவசம் மெய்க்கு இன்பம்’ என்று விளக்கியுள்ளார்.
‘தன் நோய்க்கு தானே மருந்து’ (குறள் 1102). இதற்கு, சர்க்கரை நோய்க்கு, பாகற்காய் சாறு மருந்து; ஆனால், இவள் காதல் நோய்க்கு இவளே மருந்து’ என்று, புதிய கோணத்தில் விளக்கம் தருகிறார். தொட்ட, 100 குறளுடன், விட்ட, 150 குறளையும், கூட்டி எழுதி இருக்கலாம்.
– முனைவர் மா.கி.இரமணன்