‘வீல்ஸ் பிகைண்ட் தி வீல்... பி.எம்., சி.எம்., அண்டு பியாண்டு’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் தான் இந்த நூல். நூலாசிரியர், பி.வி.நரசிம்மராவ், பிரதமராக இருந்த போது, மத்திய அரசின் செய்தித் துறை ஆலோசகராக பணியாற்றியவர். தமிழக அரசியலில் நடந்த, ஒரு மாற்றத்தை பற்றி விரிவாக எழுதுகிறார். 1996, தமிழக சட்டசபை தேர்தல் நேரம். அ.தி.மு.க., மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி. ஜெ.,யின் அணுகுமுறையால் காங்.,கிலும் கடும் அதிருப்தி. ராஜீவ் படுகொலையில், தி.மு.க., மீது புலனாய்வுக் குழு சுமத்திய குற்றச்சாட்டால், அந்த கட்சியிடனும் கூட்டணி வைக்க முடியாத நிலை.
சிதம்பரமும், மூப்பனாரும், தங்களிடம் ஜெ., அகந்தையுடன் நடந்து கொண்டதை, நரசிம்மராவிடம் கூறினர். அவருக்கும் அந்த அனுபவம் இருந்தது. ஆனாலும், ஜெ., உடனான கூட்டணியை முறிக்க அவர் அவசரப்படவில்லை.
தமிழக காங்., தலைவர்களிடம் கருத்து கேட்டார். ரஜினிகாந்தை காங்., கட்சிக்கு தலைமையேற்க வைத்து, தி.மு.க., – அ.தி.மு.க., இரண்டையும் எதிர்கொள்ளலாம் என, அவர்கள் ஆலோசனை கூறினர். நரசிம்மராவ், ரஜினியிடம் பேசிப் பார்க்கும்படி கூறினார். ‘ரஜினி சம்மதம் தெரிவித்து, காங்., கட்சியின் தலைமையை ஏற்கும் வரை, அந்த தகவலை வெளியிட வேண்டாம்; ஜெ.,வை பகைத்துக் கொள்ள வேண்டாம்; ரஜினி காங்கிரசில் சேரும் வரை, ஜெ.,வுக்கு கதவை மூட வேண்டும்’ என்றும் ஆலோசனை கூறினார். இதற்கிடையே, ஜெ.,வும் காங்., தலைமைக்கு தூது விட துவங்கினார்.
ஆனால், காங்., தலைவர்கள், தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே, ஜெ.,வை விமர்சிக்க துவங்கினர். நரசிம்மராவ் – ரஜினி சந்திப்புக்கு மூப்பனார் ஏற்பாடு செய்தார். ‘ஜெயலலிதாவின் அழிவு ஆரம்பமாகி விட்டது’ என, அவர் முணுமுணுக்க ஆரம்பித்தார்.
ஆனால், நடந்ததோ வேறு. சந்திப்பு நடந்து முடிந்த பின், ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என, ரஜினி தெரிவித்தார். எல்லாம் ‘புஸ்’சாகி விட்டது.
ஜெ.,யுடன் கூட்டணிக்கு முயலுமாறு, நரசிம்மராவ் சொன்னார். ராஜீவ் குடும்பத்திற்கு விசுவாசமானவர்கள் என சொல்லிக் கொண்ட மூப்பனார், சிதம்பரம், குமாரமங்கலம் ஆகியோர், தி.மு.க., உடன் கூட்டணி சேர வேண்டும் என, வாதாடினர்; அது வியப்பாக இருந்தது.
தொடர்ந்த விவாதத்தால், மூப்பனார் காங்.,கில் இருந்து பிரிந்து, த.மா.கா., துவங்கி, தி.மு.க., உடன் கூட்டணி வைத்தார். அதன்பின் நடந்த கதை நாடறியும். (பக். 183 − 200). மொழிபெயர்ப்பு மிக மோசம். அச்சுப் பிழைகள் அதிகம். அடுத்த பதிப்பிலாவது திருத்தப்பட வேண்டும்.
விகிர்தன்