தேர்தலாகப்பட்டது, ஓர் அரசியல் செயல்பாடு என்பது ஐதீகமாகி விட்டதா? தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தலை முன்னிட்டு, ஒலிப்பெருக்கிகளும் ஊடகங்களும் உமிழும் சொற்களில், அரசியல் சொல்லொன்றைச் சலித்தெடுக்க முயன்று சலித்துப் போயிருக்கின்றன தமிழ்க் காதுகள்.
இந்த நாட்களில் ‘தினமலர்’ நாளிதழில், ‘ஜெயமோகன் அரசியல் கட்டுரைகள் எழுதுகிறார்’ என்கிற செய்தி, முதலில் வாசகப் புருவங்களை உயர்த்தியிருக்கக் கூடும். கட்டுரைத் தொடர் வெளியாக ஆரம்பித்ததுமே அதற்குக் கிடைத்த வரவேற்பே, மேற்படி கூற்றுக்கு ஆதாரம். அந்த ஆதரவே, அந்தக் கட்டுரைகள் பிரசுர வெதுவெதுப்புக் குறையும் முன் புத்தகமாக வெளிவரக் காரணம்.
நடப்பு தேர்தலை ஒட்டி கூறப்படும் கருத்துகள் என்பதால், தி.மு.க., – அ.தி.மு.க., – ம.தி.மு.க., (ஆஹா! என்ன சந்த நயம்!) போன்ற கட்சிகளைப் பற்றிய நேரடி அபிப்ராயங்கள் இருக்குமோ...?
‘அத்தகைய பேச்சில் எனக்கு ஆர்வம் இல்லை’ என்று முன்னுரைத்துவிடும் நூலாசிரியர், ஜனநாயகம் என்பதன் அடிப்படை பற்றி யோசிப்பதற்கான வாய்ப்பாக, இதை மாற்றிக்கொள்கிறார். ‘தமிழ்ச்
சூழலுக்கு வேண்டுமானால் இந்தக் கருத்து கள் புதியவையாக இருக்கலாம். ஆனால் ஜனநாயகம் பற்றிய விவாதங்களில்
உலகமெங்கும் பேசப்படும் கருத்துகள் தான் இவை’ என்று சொல்லிவிடும் துணிவு ஜெயமோகனுக்கு.
ஆனால், புதிதாக ஓட்டளிக்கும்
உற்சாகத்தில் இருக்கும் முதுவிடலை மனங்களுக்கு, இந்த நூல் ஒரு பரிசு. பேசுபொருள் ஒருபுறமிருக்க பேசும்விதம்
அப்படி!
புகையிலையைக் குதப்பியது போல, கச்சா உண்மைகளை நேரடியாகப் பேசுகிறது, இந்த நூல். இதில் மொழி அழகல்ல, சொல்லப்படும் விஷயங்களே கவனம்கொள்ளத் தக்கவை. அந்த வகையில், ஜெயமோகன் எதைச் சொல்கிறார் என்பதைக் கோடி காட்டுவது முக்கியமானதாகிறது.
‘திருமங்கலச் சூத்திரம்’ என்கிற பெயரில், ஓட்டுக்குப் பணம் கொடுக்கிற ஆபாசம் பரவலான அங்கீகாரம் பெற்று, இன்றைக்கு, மின்வெட்டிய இருட்டினூடே, தெருவெல்லாம் காந்தி நோட்டு சிரிப்பாகச் சிரிக்கிறது. அடிப்படை ஜனநாயக உரிமையைக் காசுக்கு விற்பது அருவருப்பானது என்று ஒருவர் தன்னிடம் சொன்னதைப் பகிர்ந்து கொள்கிறார் ஜெமோ. ‘தமிழகத்தில் படித்தவர்கள், குடும்பப் பெண்கள்கூட ஓட்டுப் போடுவதற்குப் பணம் கேட்டு தெருவில் வந்து நிற்பதைப் பார்க்கிறேன்.
தயங்கியபடி நிற்கும் ஆண்களைக்கூட வீட்டுக்குள் இருந்து கொண்டு அன்னையரும் மனைவியரும் தள்ளி பணம் வாங்கச் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். எவனோ ஒருவன் வந்து நமக்குப் பணம் கொடுப்பதா என்ற ஒழுக்கம் சார்ந்த கூச்சம் கொஞ்சம் கூட அவர்களிடம் இல்லை’ என்று அவர் சொன்னாராம்.
போகிற போக்கில் ஆசிரியர் சொல்லிச் செல்லும் தகவல்கள், சுவாரசியம் கூட்டுகின்றன. இந்தியாவில் நடந்த முதல் தேர்தலின்போது, வாக்காளர்களில் மிகப் பெரும்பாலானோருக்கு சொந்தமான பெயரே கிடையாது. முண்டா சாதியினரின் ஊருக்குள் அத்தனை பேருக்கும் முண்டா என்றுதான் பெயர்! குள்ள முண்டா, நெட்டை முண்டா, பல்லில்லாத முண்டா, காலில்லாத முண்டா… தனக்கெனத் தனி அடையாளமோ எண்ணமோ சுதந்திரமோ அபிப்பிராயமோ இல்லாதவன், தான் தேர்ந்தெடுக்க வேண்டிய ஆளைப் பற்றி எப்படித்
தீர்மானிப்பான்?
ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் சொன்னதை மேற்கொள் காட்டுவது இன்னோர் உதாரணம். ‘மேடையில் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் பேசினால் கேட்பவர்கள் வாதிடத்தான் முன்வருவார்கள். ஆனால், அழுது, கொந்தளித்து, உணர்ச்சிப் பெருக்காக ஒரு பிழையான கருத்தை முன்வைத்தால்கூட மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். மேடையில் தேவைப்படுவது கருத்தல்ல; வெறும் நாடக நடிப்புதான்’.
இன்னொரு தகவல்: ‘பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தங்கத்துக்கு நிகரான மதிப்பு உப்புக்கும் இருந்தது. உப்பு ஒரு பண்டமாற்றுச் சாதனமாகவும் பயன்பட்டது. உப்பில் தொட்டு சத்தியம் செய்வது எவரையும் கட்டுப்படுத்துவதாக இருந்தது’.
இன்றைய நிலவரத்தில் ஓட்டுக் கேட்டு வந்து நிற்கும் ஏராள வேட்பாளர்களின் குற்றப்பின்னணி சந்தி சிரிக்கிறது. ஜெமோ கேட்கிறார்: ‘பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர், கட்டப்பஞ்சாயத்து செய்பவர், நிலமோசடிக்குப் புகழ் பெற்றவர், அவருக்கும் பிறிதொருவருக்குமான சண்டையில் நேரில் அடிதடிக்கு இறங்குபவர்… அப்படிப்பட்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால் அந்தத் தொகுதி மக்களில் பெரும்பான்மையினர் அவரைப் போன்ற குற்றவாளிகள் என்றுதானே பொருள்?’
அரசியல்வாதிகளின் ஸ்திதி இப்படி என்றால் அதிகாரிகள் தரப்பு? ஊழல் துவங்கிய இடத்திலிருந்து கோடிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர். ‘மன்னராட்சிக் காலத்திலும் ஊழல் மிக அதிகமாகவே இருந்தது. குறிப்பாக பிரிட்டிஷார் வருவதற்கு முன்பு தமிழகத்தில் இருந்த நாயக்கர் அரசில், அமைச்சர்களும் ராயசம் எனப்படும் நிதி நிர்வாகிகளும் பெரும் கொள்ளை அடித்தனர் என்பதை அன்றைய ஆவணங்கள் காட்டுகின்றன’ என்பவர், தொடர்ந்து, ‘இன்றைய அரசியல்வாதிகள் லட்சியவாதிகளோ நிர்வாகத் திறன் கொண்டவர்களோ அல்ல. அவர்கள் அதிகாரிகளை நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. அதிகாரிகள் ஊழல் செய்து அரசியல்வாதிகளுக்கு ஒரு பகுதியைக் கொடுக்கிறார்கள்.
இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் சக்தி என்பது அரசியல்வாதிகள் அல்ல, அதிகாரிகள்தான். இந்தியாவின் அதிகார வர்க்கம் என்பது மிகப் பிரம்மாண்டமானது. இவர்கள் செய்யும் ஊழலின் ஒட்டு மொத்தத் தொகை, அரசியல்வாதிகள் செய்யும் ஊழலின் தொகையைவிட பல நூறு மடங்கு பெரிது’ என்கிற பார்வையை அழுத்தம் திருத்தமாகப் பதிகிறார்.
இதற்கும் அடுத்த கட்டமாக இவர் எழுப்பும் ஒரு கேள்வி: ‘கட்சிகளுக்கு இன்றைய காலகட்டத்தில் எதற்கு தொண்டர் கூட்டம்? ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். முழுநேர அரசியல் தொழில். மிகப் பிரம்மாண்டமான தொழில் நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமானவர்கள் இவர்கள். தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. ஆனால் அரசியல் தொண்டர்கள், சம்பாதிக்க மட்டுமே செய்கிறார்கள். இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் நோய்க்கட்டிகளே இந்தத் தொண்டர்கள்’ என்கிறார்.
ஜனநாயகம், அரசியல் என்கிற இந்த முகாந்திரத்தோடேயே, பொருளாதாரம், சமூகவியல், கொஞ்சம் வரலாறு என்றும் தொட்டுச் செல்வது உங்களுக்கு சுவாரசியமான வாசிப்பை உறுதிப்படுத்தும். அடிப்படைகளை, தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தும்; தெரிந்தவர்களுக்கு நினைவுபடுத்தும் ஒரு புத்தகம். படித்துப் பாருங்கள்.
தொடர்புக்கு: ramevaidya@gmail.com
– ரமேஷ் வைத்யா