அரசியலையும் தேர்தலையும் கொஞ்சம் விலகியிருந்துவிட்டு, பிறகு மிக நெருக்கமாக ஒட்டிப் போய்ப் பார்க்கும் பார்வை பா.ராகவனுடையது. அதனாலேயே தேர்தல்களை எளிய முறையில் சுலபமாக வகைப்படுத்தும் கோட்பாடுகள் அவருக்கு உருவாகி வருகின்றன.
உதாரணத்துக்கு இப்படி; முன்னொரு காலத்தில் ஓட்டு என்பது, மூன்று வகைப்படும். நல்ல ஓட்டு, கள்ள ஓட்டு, செல்லாத ஓட்டு. இன்றைக்கு இது நான்கு வகையாக மாறியிருக்கிறது. நல்ல ஓட்டு, கள்ள ஓட்டு, இல்லாத ஓட்டு, போட விரும்பாத ஓட்டு.
பா.ராகவன் எளிமையாக வகைப்படுத்தினாலும் இதில் வருகிற, ‘நல்ல ஓட்டு’ என்னும் வார்த்தைக்கான பொருள் தேடல் தான் மொத்த கட்டுரைகளாக விரிகிறது. மொத்தம், 45 கட்டுரைகள். 2016 சட்டசபைத் தேர்தலுக்கு முன், ‘தினமலர்’ இணைப்பான ‘தேர்தல் கள’த்தில் சுடச்சுட வெளியானவற்றின் தொகுப்பு இது. இன்னும் ஐந்து பத்து வருடங்களுக்கு நிலைமை ஆறவோ, மாறவோ போவதில்லை என்றுதான் முன்குறிப்பாகச் சொல்லுகிறார்.
ஆசிரியர் மிரட்சியூட்ட வைக்கும் தகவல் புள்ளிவிவரங்கள் மூலம் வாசகரைப் போட்டுத் தாக்குவதில்லை. சகஜமான அரசியல் நிலைகள் குறித்த ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்.
ஒரு குண்டுக் கத்திரிக்காய் வாங்குவதற்கு எவ்வளவு சிரத்தை எடுக்கிறோம்; தேர்தலில் பொத்தான் அழுத்துவதற்கு முன் சற்று சிந்தித்தால்தான் என்ன என்பது கேள்வி.
சரியான கேள்விதான். இருபால் வாக்காளர்கள் அளிக்கும் வாக்குகள், ‘பெண்களின் பார்வையில் ஆண்கள் வாங்கிய கத்திரிக்காயாகவும், ஆண்களின் பார்வையில் பெண்கள் வாங்கிய சேலையாகவும்’ முடிவுகளைத் தந்துவிடுகின்றன. அரியும் போது சொத்தை தெரிந்தும், பிழியும்போது சாயம் வெளுத்தும் குடும்பச் சண்டையைக் கொண்டு வரும் அமைப்பு.
ராகவன் எழுதும்போது எழுத்தாளராகத் தெரியமாட்டேனென்கிறார். ஒரு நடுத்தர வர்க்கத்துப் பிரதிநிதி தெரிகிறார். ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு அலுவலகம் போகிற ஒரு பெண் அவருக்கு மனைவியாய் வாய்த்திருப்பார் போன்ற ஒரு சித்திரம். வாகன நெரிசல், வெய்யிலின் எரிச்சல், சுற்றுப்புற இரைச்சல் எல்லாம் இணைந்த சகமனித சம வாழ்வு.
இந்த பிரகஸ்பதி இவ்வளவுக்கு இடையிலும் பேனர்கள் காட்டும் அதிசயம், மயக்க (மைக்) சத்தம், அன்றாடம் பேப்பர், செய்தி சேனல் எல்லாவற்றையும் பார்த்துவிடுகிறார். அவரே அன்றாடச் செய்திகள் மற்றும் நடப்புகள் மீது பார்வையை நாட்டி (naughti) எல்லாவற்றின் மீதும் கருத்துக் கூறுகிறார். செல்போன் இலவசம் முதல் மது ஒழிப்பு வரை அத்தனை பற்றியும்.
கடலை மிட்டாய், கத்திரிக்காய், கடுக்காய், அல்வா, ஆலய அபிஷேகம் என எதனோடு ஒட்டியும் சமகாலத்து நடப்புகளை இணைத்து கருத்துகளைக் கூறிவிடுவது ராகவனின் சுலபமாகவும் பலமாகவும் இருக்கிறது.
கட்டுரைக்கு சுவை சேர்க்கிற வண்ணமாக, ஈஸ்ட்மென் கலர் காலம் முதல் வெஸ்ட் தலையோங்கிவரும் இந்தக் காலம் வரையிலான கலை, இலக்கியம், சினிமா, அரசியல், விளையாட்டு, கல்லூரிக் காலம் எல்லாவற்றிலும் ராகவனுக்கு ஞாபகங்களும் சம்பந்தங்களும் உண்டு என்பதால், அவை கட்டுரையோடு கதம்பமாகும்போது புதுவகை ஒளியையும் புது உவகையும் தருகின்றன.
‘நீ எவ்வளவு வேண்ணா பெட்ரோல் விலையை ஏத்திக்கோ கவர்ன்மென்ட்டே… நான் நூறு ரூபாய்க்குத்தான பெட்ரோல் அடிக்கப் போகிறேன்’ என்கிற ரிசர்வ் பேலன்ஸ் மோடிலேயே வண்டி ஓட்டுகிற நடுவாந்தர வாழ்க்கை. அரசாங்கத்தின் கொஞ்சம் நல்லவிதமான திட்டங்களோடு இன்னும் கொஞ்சம் கடைத்தேறுவதற்கான விருப்பத்தை சாமான்யனின் குரலாக சுவைபட ஒலித்திருக்கிறார் ராகவன்.
சிரிப்பதற்காக ஒருமுறையும் சிந்திப்பதற்காக ஒருமுறையும் அடுத்தடுத்து இரண்டு முறை படிக்கலாம். எதை முதலில் செய்வது என்பது குழப்பம்தான். வாக்காளர்களுக்கு நேருகிற குழப்பம் மாதிரியேதான் அது. ஆனால், வாக்களிப்பதைத் தவிர என்னதான் செய்ய முடியும் நாம்? என்ன இருந்தாலும் இது, ‘பொன்னான வாக்கு’ அல்லவா? வாக்களிக்கலாம். அதற்கு முன் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம். அடுத்த தேர்தலுக்கு உதவும்.
தொடர்புக்கு: sivakannivadi@gmail.com
– க.சீ.சிவகுமார்