முகப்பு » கம்யூனிசம் » உயிர்த்தெழுமா

உயிர்த்தெழுமா கம்யூனிசம்?

விலைரூ.130

ஆசிரியர் : எஸ்.ஆரோக்கியசாமி

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: கம்யூனிசம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்திய ஊடகங்களில் இடதுசாரிகளின் குரல் வலுத்திருக்கும் காலம் இது. தமிழ்நாட்டு நிலைமை இன்னும் விசேஷம். இந்த அறிவிஜீவிகளால் செய்யப்பட்டிருக்கும் ஒப்பனையை அகற்றி, பொதுவுடைமை பூமியின் அங்க லட்சணங்களைச் சரியான அளவில் வெளிப்படுத்தும் நூல் தான் இது!
கூலி உயர்வு கேட்பவர்கள், பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை முன் வைப்பவர்கள், பாலியல் பாகுபாடுகளை எதிர்ப்பவர்கள் என்று பலவிதமான சமூகக் குழுக்கள் தங்களுக்கு விமோசனமாக, மார்க்சிஸத்தைக் கொண்டாடுகின்றனர்.
இந்தக் கருத்தை எதிர் கொண்டு, ‘இந்திய ஜனநாயகம் தான் இவர்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுத் தரும்; மார்க்சிஸம் அல்ல’ என்கிறது இந்த நூல்.  
இந்த நூலில், ஒரு கட்சிப் பத்திரிகை அலுவலகத்தில், இரவு நேரத்தில் ஏற்பட்ட கொள்கைப் பிரச்னை பற்றி விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கட்சி,- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்). பத்திரிகை,- ‘தீக்கதிர்’ பிரச்னை என்ன?
‘‘1989ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி, இரவு, 11:00 மணிக்கு தீக்கதிர் பத்திரிகையில் ஒரு கட்டுரை பிரசுரமாகிக் கொண்டிருந்தது. அந்தக் கட்டுரையை எழுதியவர் பிரகாஷ் காரத். அக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவன் நான். அப்போது நான், ‘தீக்கதிர்’ நாளிதழின் துணை ஆசிரியர்.
இந்தக் கட்டுரையை மொழிபெயர்க்க என்னைப் பணித்தவர் தோழர் கே.முத்தையா. ‘தீக்கதிர்’ பத்திரிகையின் ஆசிரியர். அவர், ‘இந்தக் கட்டுரை மிகப் பிரமாதமாக இருக்கிறது. பிரகாஷ் காரத் ருமேனியா சென்று அந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டதோடு, அந்த நாட்டைச் சுற்றிப் பார்த்து ஒரு அற்புதமான கட்டுரையைத் தீட்டியுள்ளார். ஆகவே, உடனே மொழிபெயர்த்து பிரசுரியுங்கள்’ என்றார்.
அந்தக் கட்டுரையைப் பிரசுரிப்பதில் எனக்குத் தயக்கம் இருந்தது. சோஷலிச யூனியனைப் பற்றியும், மற்ற சோஷலிச நாடுகளைப் பற்றியும் கம்யூனிஸ்ட்களை பாதிக்கின்ற செய்திகள் வந்துகொண்டிருந்த காலம் அது. இந்தச் சூழ்நிலையில் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க வேண்டுமா என்ற என் கருத்தை, தோழர் முத்தையாவிடம் தெரிவித்தேன்.
அதற்கு, ‘பூர்ஷ்வாக்கள் இப்படித்தான் பொய்ப் பிரசாரம் செய்வார்கள். இப்படிப்பட்ட நேரத்தில்தான் இது போன்ற கட்டுரைகள் வெளிவர வேண்டும். ஆகவே, நீங்கள் உடனே மொழிபெயருங்கள்’ என்றார் முத்தையா.
இப்படி ருமேனியாவைப் பற்றி புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரைதான் ‘தீக்கதிர்’ பத்திரிகையில் பிரசுரமாகிக் கொண்டிருந்தது. அப்போது நேரம் நள்ளிரவு 12:00 மணி. அடுத்த நாள் கிறிஸ்துமஸ். இந்தக் கட்டுரைக்கு நேர் எதிரான செய்திகள் வந்து கொண்டிருந்தன.
அதாவது, ‘ருமேனியாவில் மக்கள் புரட்சி செய்கின்றனர். ரேஷன் கடைகள் சூறையாடப்படுகின்றன. மக்கள் ரொட்டித் துண்டுகளுக்காக அடித்துக் கொள்கின்றனர். மக்களின் கோபக் கனலில் ருமேனியா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
ருமேனிய அதிபரும், கட்சியின் பொதுச் செயலருமான சீசெஸ்கோ ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அவரது மாளிகை சூறையாடப்பட்டது. அந்த மாளிகையின் கழிப்பறைகள் கூட தங்கத்தால் கட்டப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் ருமேனியாவில் வறுமையில்லை; வேலையின்மை இல்லை; பட்டினி இல்லை என்று புகழ்ந்து எழுதப்பட்டிருந்த கட்டுரையை, ‘தீக்கதிர்’ பத்திரிகையில் எப்படி வெளியிடுவது?’’ (பக். 44, 45, 46) என்று எழுதுகிறார் நூலாசிரியர்.  
ருமேனியப் பிரச்னையை... மன்னிக்கவும்; காரத் பிரச்னையை எப்படித் தீர்த்தனர் தெரியுமா?
‘தீக்கதிர்’ ஆசிரியர் குழுவில் இருந்தவர்கள், முத்தையா நீங்கலாகக் கூடிப் பேசி, பிரகாஷ் காரத்தின் கட்டுரையை வெளிவராமல் தடுத்து விட்டனர்.
ருமேனியா விவகாரம் போன்ற பல பகுதிகள் இருக்கிற இந்த நூல், ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட கருத்தோட்டங்களைப் பற்றிச் சொல்கிறது. பொதுவுடைமை ஆதரவாளராக இருந்தவர் ஜனநாயகத்தின் ஆதரவாளராக மாறியது ஏன் என்பதற்கான விடைகள் இதில் உள்ளன. கம்யூனிஸத்தின் சரிவு எப்படி ஏற்பட்டது, கம்யூனிஸக் கனவு சாத்தியமாகுமா என்பது குறித்து வெளிப்படையாகச் சிந்திக்கிறார் ஆரோக்கியசாமி.
வழக்கமாக மார்க்சிஸ்டுகள் பயன்படுத்தும் உபரி மதிப்புக் கோட்பாடு, இயக்கவியல் பொருள் முதல் வாதம் போன்ற பூச்சாண்டிகள் இதில் இல்லை. சித்தாந்த சிக்கல்களைத் தவிர்த்து, தத்துவப் பிரயோகங்களில் நேர விரயம் செய்யாமல், வரலாற்றுச் செய்திகளை மட்டுமே இவர் முன்வைக்கிறார். நாளிதழ் பழக்கம் மட்டுமே உள்ளவர்களுக்கும் புரியும் பாஷை இவருடையது.
ருமேனியா மட்டுமல்ல, சோவியத் ரஷ்யா, சீனா, மாவோவின் மரண வாரிசான போல்பாட் என்று படுகொலைகளைப் பற்றிய விவரங்களை இவர் எடுத்து எழுதும்போது, மார்க்சிய கோட்டையிலிருந்து ஒவ்வொரு கொத்தளமாகச் சரிந்து விழுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில், ஆரோக்கியசாமிக்கு பதில் சொல்ல வேண்டியது அவசியம்.
சுய சிந்தனை உள்ளவர்களும், சமூக நலன் விரும்புகிறவர்களும், உண்மையை ரசிப்பவர்களும் தேடிப் படிக்க வேண்டிய புத்தகம் இது.
தொடர்புக்கு: subbupara@yahoo.co.in

பாமணி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us