முகப்பு » சிறுவர்கள் பகுதி » அபாயப்பேட்டை

அபாயப்பேட்டை

விலைரூ.90

ஆசிரியர் : ரமேஷ் வைத்யா

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

பகுதி: சிறுவர்கள் பகுதி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் தமிழ் இலக்கியச் சூழலில் மிகவும் குறைவு. அப்படியே எழுதினாலும் அந்தச் சின்ன வாசகர்களுக்கு, எளிதில் புரியும் சொற்களில், செறிவான தமிழ் நடையில் எழுதுவது மிக மிக அபூர்வம். அந்த இரண்டையும்  பூர்த்தி செய்யக்கூடிய எழுத்தாளராக ரமேஷ் வைத்யா இருக்கிறார்.
‘அபாயப்பேட்டை’ கதை சுட்டி விகடனில் தொடராக வந்து, பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் மனதை வெற்றிகொண்ட கதை.
கதை மட்டும் அல்லாது மொழியறிவையும் குழந்தைகளுக்கு ஊட்டுவது மிக அவசியம் என்பதில் இந்த நூல் கவனம் செலுத்துகிறது. ‘ரூபியின் இதழ்களின் மேல் ஒரு சின்னச் சிரிப்பு வந்து அமர்ந்தது. அது இளஞ்சிவப்பினால் ஆன ஒரு பூவைப் போல இருந்தது’ என்ற வரிகள், கவிதை மனதை, சிறுவருக்குள்ளும் குழந்தைகளுக்குள்ளும் வளர்க்கும் தானே!
இருட்டு என்றாலே பயம், கொஞ்சம் அச்சம் பெரியவர்களுக்கும் வரும். அந்த இருட்டில் ஒரு சிறுமி தன்னந்தனியாக அதுவும் மழை இருட்டில் மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்?
அப்படி மாட்டிக்கொண்டவள் ரூபி என்ற சிறுமி. அவளை காப்பாற்ற சாபநரி ஒன்று வருகிறது. நரியை தந்திரம் நிறைந்ததாக, ஏமாற்றக்கூடிய ஒன்றாகத்தான் நாம் எல்லா கதைகளிலும் படித்திருக்கிறோம். முதல் முறையாக இந்த கதையில், நரியை  நன்மை செய்யும் விலங்காக பார்க்கும்போது, நரி பற்றிய நம்முடைய  பழைய பிம்பங்களும், தவறான பார்வைகளும் அந்த மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடுகின்றன.
தரீமியன் என்ற தீயவனை அழிக்க மச்சகந்திப்பூவை எடுத்து வருகிறாள் ரூபி. காற்றையும், கையில் பிடித்து வருகிறாள் என்பதை படிக்கும்போதே மச்சகந்திப் பூ எப்படி இருக்கும் என்று கற்பனை விரிகிறது. அந்தப் பூவுக்கு மீன் வாசம் எப்படி வீசும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.
ரூபி காற்றை கையில் பிடிப்பது, ஊட்டி மலைப்பகுதியில் தலைக்கு மேலே மேகம் நம்மை தழுவிச்செல்வதை நினைவூட்டுகிறது.  நூல் முழுக்க தொப்பிச்சாத்தான், ஓணான் ராஜ்யம், பைராகபா குகை, தீ ஊதி ஓநாய்கள் என்று நிறைய மந்திர தந்திர மாயாஜல வித்தைகள் தெரிந்தவர்கள் வந்து போகிறார்கள்.
அவர்களைப் படிக்கும் போது மனதிற்குள் விட்டாலாச்சார்யாவின் குட்டிச்சாத்தான்களும், இராம.நாராயணன் பட, குட்டி நாயகிகளும் நம் கண் முன்னே வந்து போகிறார்கள். ‘பஜுலேஹிரா’ என்ற மந்திரவாதி, ரூபியின் தம்பியைக் கடத்திச் சென்று விடுகிறான். தன் தம்பியைக் காப்பாற்றப் போகும் ரூபியை, மந்திரவாதி கரையான் புற்றுக்குள் சிறை வைக்கிறான். பிறகு அவளை அழிக்க பிரேதங்களை ஏவி விடுகிறான். எதைக் கண்டும் அஞ்சாமல் ஒரு குட்டி காளியாக, மந்திரங்களைப் பயன்படுத்துகிறாள் ரூபி.
நிஜத்தில் மந்திரம் என்பது மனோதைரியத்தைக் குறிக்கும். மனோதைரியம்தான் இன்றைய சிறுவர், சிறுமியருக்குத் தேவை. பிரச்னைகளில் இருந்து எப்படி வெளியில் வருவது என்ற அறிவுக் கூர்மை தேவை. அதை ரூபி என்ற சிறுமியின் வாயிலாக எல்லா சிறுவர், சிறுமியருக்குள்ளும் புகுத்துகிறார் நூலாசிரியர்.
காளிகளும், துர்கைகளும் நான்கு கைகளுடனும், சூலாயுதம், வேலாயுதங்களுடனும் தனியாகப் பிறப்பதில்லை. மன தைரியம், உறுதி, விடாமுயற்சி, தனக்கு நேரும் ஆபத்திலிருந்து விடுதலை பெறுவது இதெல்லாம் தான் ஆயுதங்கள், கைகள். பெண்கள் மீதும், பெண் குழந்தைகள் மீதும் தொடர்ந்து வன்முறைகள் ஏவப்பட்டு வரும் இன்றைய சூழலில், ரூபியின் மனோதைரியம், நாவலைப் படிக்கும் சிறுவர், சிறுமியருக்கும் நிச்சயம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
தொடர்புக்கு: eslalitha@gmail.com

இ.எஸ்.லலிதாமதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us