சென்னைக்கு தனித்த அடையாளங்கள், பல இருந்தாலும், காலத்தால் அழியாத அடையாளங்களாக இருப்பவை, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் ஆகிய நதிகள் ஆகும். பயணிகளையும், உப்பு, மிளகு, மீன், விறகு ஆகியவற்றை படகில் சுமந்து ஓடிய, இந்த நீர்வழிப் பாதையில், இன்று சென்னையின் மொத்த கழிவுநீரும் ஓடுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் கலங்களிலிருந்து, கூவம் ஆரம்பிக்கிறது என்ற இயற்கை சான்றையும், பல்லவர் மற்றும் சோழர் காலங்களில், கூவம் ஆற்றிற்கு தரப்பட்ட முக்கியத்துவம் குறித்த வரலாற்றையும் இந்நூல் விவரிக்கிறது.
கூவம் பயணம் செய்யும் 72 கி.மீ., நீளத்தில், எந்த பகுதியில் இருந்து, நதி சாக்கடையாகிறது என்பது குறித்தும், விவரிக்கப்படுகிறது. கடந்த, 1950ல், 49 வகை மீன்கள் வாழ்ந்த கூவம், இன்று, நான்கு மணி நேரம் கூட, மீன்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிட்டது என, பல அதிர்ச்சிகரமான தகவல்களைத் தருகிறார் ஆசிரியர்.
‘தேம்ஸ் நதி’ போல், கூவம் மணக்குமா என்ற கேள்விகளுக்கான பதில், இந்த புத்தகத்தில் உள்ளது.
அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் நதியின் வரலாறு, அந்த நதிகள் சாக்கடை போல் மாறியதற்கான காரணங்கள், அவை, மீண்டும் உயிரோட்டமுள்ள நதியாக மாற என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட, முக்கிய தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் உள்ள ஆறுகள், அதன் பிறப்பிடம், தற்போதைய நிலை, அந்த ஆறுகளை உயிர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள நினைக்கும் ஆய்வாளர்கள், மாணவர்கள், சூழலியலாளர்கள் மற்றும் சென்னை மீது தீராத காதல் உடைய சமூக ஆர்வலருக்கும், உதவும் ஆய்வு நூல்.
மு.அருண்குமார்