திருநெல்வேலி சீமைப் பற்றிய, சிறு சிறு, பல அரிய செய்திகளை, இந்நூலுள் தொகுத்து வழங்கி உள்ளார், நூலாசிரியர். தென்கயிலை எனவும், பொதிகைமலை எனவும் போற்றப்படும், அகத்தியர்மலை முதல், அம்பாசமுத்திரத்தில் துண்டிக்கப்பட்ட தண்டவாளம் ஈறாக இருநூற்றுக்கும் மேற்பட்டச் செய்திகளை தரும், அரிய தகவல் களஞ்சியமாக திகழ்கிறது இந்நூல்.
நெல்லை மாவட்டத்தின், பண்பாட்டின் சின்னங்களாக விளங்கும் கோவில்கள், கோபுரங்கள், அரண்மனைகள், தேவாலயங்கள், நீரூற்றுகள், அருவிகள், ஆறுகள், பாலங்கள், விலங்குகளின் சரணாலயங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், சிற்பங்கள், மடங்கள், மரங்கள், மனிதர்கள், அணைக்கட்டுகள் என, நெல்லை சீமையின், ஒட்டுமொத்த கருத்து கருவூலமாக திகழ்கிறது.
சுலோச்சனா முதலியார், லண்டனில் லாட்டரியில் தனக்கு கிடைத்த மொத்த பணத்தையும் கொண்டு, லண்டன் வாட்டர்லூ பாலம் போல, நெல்லையில் கட்டிய பாலத்தை பற்றியும், கலையம்சம் கொண்ட பார்வதி திரையரங்கை திறக்க வந்த முதல்வர், காமராசர் தியேட்டரை ஓட்ட தடை விதித்தது பற்றியும், விரிவு பட விளக்கியுள்ளார்.
குத்தாலம் (குத்து + ஆலம்) செங்குத்தாய் விழும் நீர் என்னும் பெயர் காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் திருநெல்வேலி சீமைக்காரர்களுக்கு மகிழ்ச்சி தரும் வரலாற்று திரட்டு.
– புலவர்.சு.மதியழகன்