திருத்தொண்டர் புராணம் என்று போற்றப்படும் பெரிய புராணம், 63 சிவனடியார்களின் பக்தியையும், வரலாற்றையும் பேசும். 4,286 பாடல்களை கொண்டு அழகு தமிழில், சேக்கிழார் எழுதிய பக்திக் காவியத்தை, எளிய ஆங்கிலத்தில் இந்த நூலில் பொறியாளர், அறிஞர் எஸ்.பொன்னுசாமி தெளிவாகத் தந்துள்ளார்.
‘அப்பாலும் அடி சார்ந்த அடியார்க்கு அடியேன்’ என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தியார் ஏன் பாடினார்? உலகெங்கும் வாழும் மக்கள் இந்த வரலாற்றை அறிந்து சிவபக்தராக ஆக வேண்டும் என்று தான். அதை ஈடேற்றும் வகையில் இனிய ஆங்கிலத்தில் இந்நூல் நமக்கு கதை சொல்கிறது.
தில்லை நடராஜர் கோவிலில் சேக்கிழார் பெரியபுராணம் அரங்கேறியதை முகவுரையாக, சுருக்கமாக படத்துடன் தந்துள்ளது பாராட்டத்தக்க தொடக்கமாகும்.
காவிய நாயகர், சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு விரிவாக முதலில் தரப்பட்டுள்ளது.
திருவெண்ணெய்நல்லூரில், ‘ஆட்சியில் ஆவணத்தில், அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய்’ என்று
சேக்கிழார் பாடினார்.
இதை தெளிவாக ஆங்கிலத்தில் தந்துள்ளார். Government order proof of agreement or outside witness (பக்.25). வேதியர், மறையவர் என்று ஆங்கிலத்தில் இடத்திற்கு ஏற்ப அழைப்பதும் பொருத்தமாக உள்ளது.
சுந்தரர் தரிசித்த தலங்களும், அவரது இனிய சரித்திரமும் ஆற்றொழுக்காக, ஏதும் விடுபடாமல் மிகக் கவனமுடன் எழுதியுள்ளமை பாராட்டத்தக்கது. பரவை, சங்கிலி காதல் திருமணமும், ஊடலும், ஆங்கில நாவல் நகர்வது போல் மிக இனிமையாகவும், பக்தி ரசம் குன்றாமலும் செல்கிறது.
தமிழில் கதை எழுதுபவர், குரு உபதேசம் போல் தன் நடையில் எழுதிக் கொண்டே போவர். ஆனால், ஆங்கில நூலின் சிறப்பே, அதன் கதாபாத்திரங்கள் நேருக்கு நேர் உரையாடுவது தான். அத்தகு ஆங்கில உத்தியில் நாயன்மார்களைப் பேச வைத்துள்ளார்.
திருவோடு மறைந்து சிவனடியாருடன், திருநீலகண்டர் நடத்தும் உரையாடல் (பக்.57) கண் முன் நடக்கும் காட்சியாக மனதைக் கவர்கிறது.
நாயன்மார்களின் கதையை படத்தின் வழியே விளக்கி, அந்தப் படத்தின் கீழ் சம்பவத்தை ஆங்கிலத்தில் ஒரு வரியில் அருமையாக எழுதியுள்ளது அற்புதமாக உள்ளது. மெய்பொருள் நாயனார், சண்டேசர், மயிலைப் பூம்பாவைக் காட்சி விளக்கம் ரத்னச் சுருக்கம்.
திருமூலர் வரலாற்றின் படவிளக்கத்தில் ‘Cattle’ என்ற பொது சொல்லிற்கு பதில், cow என்ற சிறப்புச் சொல்லால் குறிப்பிட்டிருந்தால், மேலும் சிறப்பாய் இருந்திருக்கும். புகழ்ச் சோழர், அதிபத்தர் வரலாறுகள் மிக அற்புதமாக அமைந்துள்ளன.
பெரியபுராணம் ஆங்கிலத்தின் வழி பல நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் இந்த எளிய, இனிய ஆங்கில நூல் தனித்தன்மை கொண்டதாய்த் திகழ்கிறது.
– முனைவர் மா.கி.ரமணன்