தேவார மூவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரின் பாடல்களில் அமைந்துள்ள யாப்பை ஆய்ந்து, அதன் வழி புலப்படும் சில புதிய யாப்பிலக்கணக் கூறுகளை விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது.
முன்னுரை பா வகைகள் குறித்த இலக்கணத்தையும், நூலைப் பற்றிய அறிமுகத்தையும் நமக்குத் தருகிறது. இவை யாப்பிலக்கணம் பற்றிஅறியாதவரும் நூலைப் பற்றி அறிவதற்கு உறுதுணையாகிறது.
அத்துடன் சில யாப்பிலக்கணக் கலைச்சொற்களையும், விளக்கங்களையும் அளித்து, நூலை எவரும் படிக்கும்படி எளிமைப்படுத்தியுள்ளார், நூலாசிரியர்.
நூலறிமுகத்தைஅடுத்து ஞானசம்பந்தரது செய்யுட்களை பாக்கள் அடிப்படையில் பிரித்து, 13 வகைகளில் அடக்கி, ஒவ்வொரு பாவிற்குரிய விளக்கமும் தேவார உதாரணப் பாடல்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.
இவற்றில் இலக்கண நூலுள் காணப்படும் கருத்துகளும், செய்யுள்களில் உள்ள புதுமைகளும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
பண்ணத்தி எனப்படும் தாழிசை, துறை, விருத்தங்கள் நுணுகிச் சிந்திக்க தக்கனவாகவும், இசை பொருந்தியனவாகவும் இருத்தல் வேண்டுமென்ற இலக்கணத்தை இந்நூல் தெளிவாக உணர்த்துகிறது.
நூலாசிரியர் நாவுக்கரசர் அளித்த செய்யுட்களை, 10 பா வகையுள் அடக்கியும், சுந்தரர் அளித்த செய்யுட்களை, 8 பா வகையுள் அடக்கியும் விளக்கம் அளித்து உள்ளார்.
இவற்றின் வழி பல புதிய செய்திகள் புலப்படுகின்றன. நூலாசிரியர் நம்பியாண்டார் நம்பி பண்முறைப்படி திருப்பதிகங்களைத் தொகுத்து உள்ளதன் சிறப்பை விளக்கிக் கூறுகிறார். அதன்படி பார்வையால் ஒன்றாயினும், ஒரு சில பதிகங்கள் வெவ்வேறு இடத்தில் இடம்பெற்றுள்ளமைக்குக் காரணம், அவை பல்வேறு கட்டளைகளால் அமைந்தவை என்பதை அறிய முடிகிறது.
மேலும், இந்நூலில், தேமா, புளிமா முதலிய வாய்பாடுகள் ஓசை அளவுக் குறியீடுகளாகவே உள்ளன. எழுத்தெண்ணிக்கை முறைமையாலேயே தேவார ஆசிரியர்கள் சீர்களின் அளவைக் கண்டனர்.
எ.கா., கூவிளம் - ஒற்று நீக்கி மூன்றெழுத்துகளுடைய வாய்பாடு. தேமா, ஒற்று நீக்கி மூன்றெழுத்துக்களுடைய வாய்பாடு. இவை வேறு வேறு வாய்பாட்டில் இருப்பினும், எழுத்தெண்ணிக்கையால் ஓசை சமனுடையவையே. தேவார மூவர், இவ்வகை இணைச் சீர்களைக் கட்டளைப் பனுவலில் பயன்படுத்தினர். இவை அவர்கள்யாப்புலகிற்கு அருளிய அருட்கொடைகள்.
கட்டளைக்கலித்துறை என்ற பெயர் சமயசாரியர்களின் காலத்தில் இல்லை. அப்பரடிகளின் திருவிருத்தக் கட்டளைகள் யாவும் வெண்சீர் வெண்டளைகளையே கொண்டுள்ளமையால், அவரே கட்டளைக் கலித்துறைக்குத் தளைக் கட்டுப்பாடு விதித்தவர் எனக் கருதலாம்.
திருஞானசம்பந்தர் அருளிய திருப்பனுவல்களுள் கலிவிருத்தங்களே மிகுதி. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவின் உறுப்பாகிய முடுகியலைக்கலிப்பா இனங்களாகிய கலித்துறை, கலிவிருத்தங்கட்கும் உரியதாக ஆக்கியருளியவர் திருஞானசம்பந்தர்.
ஒரே பனுவலைக் கட்டளைக் கலித்துறையாகவும் ஆக்கலாம். தரவுகொச்சக வடிவிலும் விளக்கலாம். முதலான பல புதிய செய்திகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நூலின் இறுதியில், தேவார மூவர் பாடிய பதிகத் தொடக்கம் கையாண்ட பா வகை, நலம் இவை குறித்த பட்டியலும், பனுவல் வகைப்பட்டியல் ஒன்றும் அளிக்கப் பெற்றுள்ளன.
தமிழை எழுத்தெண்ணிப் படிப்பது என்பது ஒரு சுவை. அச்சுவையில் மூழ்கி திளைத்தவர் இந்நூலாசிரியர் என்பது இந்நூலால் அறிய முடிகிறது.
மேலும், இவர் இந்நூலில் தாண்டக வேந்தருக்கு, 27 எண்ணிக்கையில் தாண்டகம் வரைந்துள்ளார்.
இவ்வாறு வோர மூவர் உலகிற்கு உணர்த்த விரும்பிய பல யாப் பிலக்கணப் புதுமைகளை நாம் உணரும்படியும், பிற்கால யாப்பிலக்கணத்தார் பின்பற்றுபடியாகவும், இந்நூல் எளிய நடையில் அமைந்து உள்ளது.
இத்தகைய அரிய நூலைத் தமிழகம் வரவேற்கும் என்பதில் ஐயமில்லை.
–முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்