தமிழர்களின் பாரம்பரியமாகக் கருதப்படுகிறது ஜல்லிக்கட்டு. சங்க காலம் முதல் வழி வழியாக ‘ஏர் தழுவல்’ என்னும் மாட்டை அடக்கும் போட்டி தமிழர்களின் அடையாளமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது காளையோடு மல்யுத்தம் என்பதாகப் பலர் பார்க்கின்றனர்.
அது தவறு. மாறாக, காளையோடு ஓர் உற்சாக விளையாட்டு என்பதே நிஜம். உழவுத் தொழிலுக்கு அடிப்படை காளை மாடுகள். அத்தகைய காளைகளைப் போற்றி அவற்றோடு விளையாடி மகிழும் உன்னத் திருநாள் தான் ஜல்லிக்கட்டு.
நம் பாரம்பரியமான, இயற்கை வளங்கள், கால்நடைகள் என்று ஒவ்வொன்றையும் நாம் இழந்து கொண்டே வருகிறோம். அது மட்டுமல்லாமல், அவை குறி வைத்த அழிக்கப்பட்டு வருகின்றன என்பது ஒரு சோகமான உண்மை.
நம் நாட்டில், 92 வகையான நாட்டு மாடுகள் இருந்திருக்கின்றன என்பதை அவற்றின் பெயர்களோடு ஒரு நீண்ட பட்டியலைத் தந்திருக்கிறார் ஆசிரியர். படிக்க மலைப்பாக இருக்கிறது, இவ்வளவு ரக மாடுகளா என்று. ஆனால், இன்று இருப்பதோ, பத்துக்கும் குறைவான ரக மாடுகளே. ஏனைய மாடுகள் அழிந்து போயின என்பது மகத்தான சோகம்.
மிகுந்த உழைப்புடன் ஏராளமான தகவல்களைத் திரட்டி எழுதப்பட்டிருக்கும் இந்த நூலை வாசிக்கும் போது இவ்வளவு பெரிய பெருமைக்குரிய மரபுக்குச் சொந்தக்காரர்களா நாம் என்ற பெருமிதமும் அவற்றை எல்லாம் இழந்து இன்று பரிதாபமாக நிற்கிறோமே என்ற சோகமும் நம்மைக் கல்விக் கொள்ளும்.
– மயிலை கேசி