மாயையின் பிடியில் அகப்படாமல் சத்தியம், தர்மம், நியாயம் ஆகியவற்றின் வழியில் செல்லும் தவத்தைச் செய்யும் வழிமுறைகளைத் தம் குரு மூலம் கற்றுள்ள சுவாமி ஓம்காரானந்தா, பிறப்பு முதல் இறப்பு வரை அமையும், அமைய வேண்டிய நிகழ்வுகளை இந்த ஆங்கில நூலில் விளக்குகிறார்.
வல்லாரை, மணித்தக்காளி, கரிசலாங்கண்ணி ஆகிய மூலிகைக் கீரைகளை உண்ணுமாறு கட்டளையிட்ட குருவின் உபதேசங்களை மனதில் கொண்டு, தத்துவங்களை விளக்குகிறார்.
உலகத்திற்கே ஆன்மிக வழிகாட்டும் இந்தியாவில் தான் காஸ்யபர், அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், கவுதமர், ஜமதக்கினி, பரத்வாசர் ஆகிய சப்தரிஷிகள் தோன்றினர். இறைவனே குரு வடிவில் தட்சிணாமூர்த்தியாக உள்ளார்.
எதை விதைக்கிறோமோ அதுவே விளையும். நம் கர்ம வினைப்படி நல்லவை, தீயவை நிகழ்கின்றன. காரண, காரியங்களின்படி தான் வலிகளும், நோய்களும் ஏற்படுகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
இன்பம், துன்பம் எல்லாம் வினைப்பயனே. அதனால், வலியோ, நோயோ விரும்பி ஏற்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.
இந்தப் பிரபஞ்சத்தின் தந்தை போன்றது, ‘ஓம்’ என்னும் ஓங்கார ஒலி. ஓம் என்பதை யார் ஒருவர் முறைப்படி தொடர்ச்சியாக அடிக்கடி சொல்கிறாரோ அவருடைய மனக்கவலை நீங்கும்; நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்கும். மனம், உடல், சிந்தனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, நெறிப்படுத்தும் என்கிறார். உடலில் அமைந்துள்ள ஆறு சக்கரங்கள் பற்றியும் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா, பிரான்ஸ், இலங்கை, நேபாளம் முதலிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ள சுவாமி, 78 நூல்களை எழுதியுள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்றபோது, எடுக்கப் பெற்றுள்ள நிழற்படங்கள் நூலில் இடம் பெற்றுள்ளன.
அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய எளியமொழி நடையில் எழுதப் பெற்றுள்ள ஆங்கில நூல். பயன் தரும் நல்ல நூல்.
– பேரா., ம.நா.சந்தானகிருஷ்ணன்