கதைகள், மனிதனின் மனத்தையும் அறிவையும் செம்மை படுத்துகிறது;
மகிழ்ச்சியை அளிக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை கதைகளை விரும்பிப் படிப்பர். நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், நல்ல அறிவுரையையும் கூறுகிறது. அறிய வேண்டிய அப்பாஜியின் அற்புதக்கதைகள் என்ற இந்த நூல். 21- தலைப்புகளைக் கொண்டுள்ளது.
நல்ல சிந்தனை ஆற்றலை வளர்க்கிறது. கதையில் கிருஷ்ணதேவராயர் என்ற மன்னர், அப்பாஜி என்ற அமைச்சர், ராணி, கிருஷ்ணதேவராயரின் மைத்துனர் முதலியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
சிபாரிசு இருக்கிறது என்பதாலேயே தகுதி இல்லாதவர்களை அமைச்சர் ஆக்கமுடியாது என்பதை இந்த நூல் விளக்குகிறது. ‘தைரியம்’ என்ற தலைப்பில் வரும் ஒரு தொடர், குடிமக்களைக் காக்க வேண்டிய மன்னனே குடிகாரனாய் இருந்தால் நாடு செழிக்குமா? என்ற வரிகளின் மூலம், நாட்டை ஆள்பவர் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற நீதியைச் சுட்டுகிறது.
மன்னரை எட்டி உதைத்த காலுக்கும், மார்பில் எச்சில் துப்பிய வாய்க்கும் என்ன பரிசளிக்கலாம் என்று புதிர் போட்டு, மன்னரை எட்டி உதைத்த காலுக்கு தங்கக்காப்பு போட வேண்டும், வாய்க்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று விடை கூற, இந்த இரண்டு செயல்களையும் தங்கள் குழந்தை இளவரசனைத் தவிர வேறு யாரால் செய்ய முடியும் (பக். 78) என்று, அமைச்சர் அப்பாஜியின் சாதுர்ய பேச்சு அமைகிறது.
இப்படியே தொடர்ந்து கதைகளைப் படிக்க படிக்க மேலும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. குழந்தைகளுக்கு சொல்லாட்சித் திறனையும், நல்ல சிந்தனை ஆற்றலையும் இக்கதைகள் வளர்க்கும். குழந்தைகள் மட்டுமல்லாமல் எல்லாரும் படித்துப் பயன் பெறலாம்.
– முனைவர் இரா. நாராயணன்