திரைப்படப் பாடல் ஒன்றின் வரிகளை நுாலின் தலைப்பாகக் கொண்டிருக்கும் இந்நுால், அரசியல் சிந்தனைகளை அலசும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. இன்றைய அரசியல் சூழலில் தக்கது எது, தகுதியானது எது என்பதை ஆழ்ந்த சிந்தனையோடு வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.
‘மக்கள் எவ்வழி மன்னன் (தலைவர்கள்) அவ்வழி’ என்ற சிந்தனையே இன்று எண்ணத்தக்கதாய் உள்ளது என்ற கருத்தை முன்வைக்கும் ஆசிரியர், அரசியலில் எத்தகைய மாற்றம் வர வேண்டும் என்பதை இந்நுாலில் வலியுறுத்துகிறார்.
கடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி அமைத்தது, தமிழக அரசியல் சூழலில் குறை கூற முடியாத ஒன்று என்ற அடிப்படையில் தம் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். ஓட்டு வேட்டையாடும் அரசியல் தலைவர்கள் ஒருபுறமிருக்க, பண வேட்கைக்காகப் பலியிடப்படுவோராக மக்கள் இருக்கின்றனரே என்ற ஆதங்கத்தை ஆழமாகச் சிந்திக்கிறார் கட்டுரையாசிரியர்.
இப்போதும், அரசியலில் ‘திட்டம் போட்டுத் திருடும் கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிறது’ என்பதைத் தோலுரித்துக் காட்டும்படியான கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது இந்நுால்.
மக்கள் அறியாமையில் இருக்கும்போது ஆகாதது எது என்பதைத் திட்டவட்டமாகவே திராவிடக் கட்சிகள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றன என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார் நுாலாசிரியர்.
இந்த நுாலைப் படிக்கும் ஒருவர், இன்றைய அரசியல் சித்தாத்தங்களையும், சிதறிப் போயிருக்கும் கூட்டணிகளையும் பற்றி ஒன்றும் புரிந்து கொள்ள முடியாது என்ற முடிவுக்கே வருவர். ஒரு சார்புத் தன்மையாக எழுதப்பட்டிருக்கும் நுால்.