மனித அறிவால் அறிந்த கோள்கள் சில; அறியாத கோள்கள் பல. அனைத்து கோள்களையும், பால்வெளிகளையும் உள்ளடக்கிய கற்பனைக்கு எட்டாத இந்த அண்டத்தின் விந்தை அளப்பரியது. பயிலப்பயில வியப்பைத் தருவது.
எண்ணிக்கையில் அடங்கா கோள்களை உள்ளடக்கிய இந்த பிரபஞ்சத்தின் செறிந்த அறிவியல், பொருளியல் உண்மைகளைத் தமிழில் விளக்க முற்படும் நுால் இது.
அகன்று விரிந்த இந்த அண்டத்தின் தோற்றம், அதன் வயது, அளவு, வடிவம், ஆய்வுகள் ஆகியவை உலகெங்கும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
அண்டத்தின் ஆதி அந்தத்தை அந்த இறைவனைத் தவிர யாரோ அறிந்தவர் எனும் ஆன்ம தத்துவப்பார்வையைக் கடந்து, மனித ஆய்வுக்குட்பட்ட பல்வேறு அனுமானங்களும் கோட்பாடுகளும் புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளன.
அண்டத்தின் அளவு மற்றும் வரலாறு முழுவதும், ஒத்திருக்கும் இயற்பியல் விதிகளாலும், பல்வேறு மாறிலிகளாலும் நிர்ணயிக்கப்படுவதை விளக்கி, அண்டத்தின் மூன்று மூலக்கூறுகளான காலவெளி எனும் பரந்தவெளி, அவ்வெளியில் பருப்பொருட்கள் வடிவங்கள் நிரப்பிக்கொண்ட அமைவு, அவற்றை நிர்வகிக்கும் இயற்பியல் விதிகள் ஆகியவை அலசப்படுகின்றன.
அண்டத்தைப் பற்றிய புரிதலுக்காக வரலாற்று மாதிரிகள், புராண மாதிரிகள் போன்றவற்றுடன் கி.பி., 5-6 நுாற்றாண்டுவாக்கில் மொழியப்பட்ட அணுவியல், தத்துவவியல் மாதிரிகள், வானவியல் மாதிரிகள், கருத்தியல் மாதிரிகள் ஆகியவையும் விளக்கப்படுகின்றன.
சூரியத்தொகுதி மீதான ஆய்வு விபரங்கள், அதன் உள்ளடக்கமான கிரகங்கள், விண்வீழ் கற்கள், சூரிய குடும்பத்தின் தோற்றம், அமைப்பு, சூரியன் பற்றிய அறிவியல் உண்மைகள், சூரிய காந்தப் புலத்தால் உண்டாகும் விளைவுகள், புவியின் மீதான சூரியனின் ஆதிக்கம்.
மேலும், ஆற்றல், ஒளி மண்டலம், காந்தப்புலம், வெப்பச்சலன விளைவுகள் போன்றவற்றுடன் சூரியக்குடும்பத்தில் ஒன்றிய கோள்களின் தன்மைகள், தனித்தனி அத்யாயங்களில் விளக்கப்பட்டிருக்கின்றன.
பின்னிணைப்புகளில், ஒளி ஆண்டு பற்றிய விபரங்கள், ஒளியின் வேகம், ஒளி ஆண்டு கணக்கீடு, ஈர்ப்பு விசைகள் ஆகிய தகவல்களோடு, அரிஸ்டாட்டில், நியூட்டன், கோப்பர்னிக்கஸ், கலிலியோ, கெப்லர், ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் போன்ற அறிவியல் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகள் போன்றவையும் சேர்க்கப்பட்டு உள்ளன.
ஆங்கில அறிவியல் சொற்களின் கடின தமிழாக்கங்களுடன் மூலச்சொற்களையும் தந்திருந்தால் நுாலின் வாசிப்பை இன்னமும் எளிமைப் படுத்தியிருக்கும்.
– மெய்ஞானி பிரபாகரபாபு