கி.பி., 1500 –- 1600 காலத்திற்குட்பட்ட சோழ மண்டலக் கடற்கரையும், அதன் உள்நாட்டு விபரங்களும் அடங்கிய முனைவர் பட்ட ஆய்வேட்டைச் சார்ந்த நுால் இது.
சோழ மண்டலப் பகுதியின் பொருளாதார, சமூகத்தை ஆய்வு செய்கிறது; இதற்காக உள்நாட்டு, அயல்நாட்டுத் தரவுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
அக்காலக்கட்டத்தில் தக்க வரலாற்று விளக்க நுால்கள் இல்லாத நிலையில், கல்வெட்டுகளின் தேதிகளும் தெளிவில்லாத நிலையில், தென்னகக் கல்வெட்டுத் தரவுகள் மற்றும் செப்பேடுகள் தரும் ஆதாரங்களைக் கொண்டு, சமூகத்தின் அன்றைய நிலையை இந்நுால் பன்முக ஆய்வு செய்கிறது.
சோழ மணடலத்தின் நகரங்கள், துறைமுகங்கள், கிழக்கில் கடல் அமைந்துவிட்டதில் மேற்கு பகுதிகளை வரையறை செய்வதில் இருந்த சர்ச்சைகள் ஆகியவற்றை விளக்கி, சோழ மண்டலத்தின் வரலாற்றுப் புவியியல் மீதான புரிதலில் பல்வேறு வரலாற்று அறிஞர்களின் வலிமையான பங்களிப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சோழ மண்டலத்தின் பொருளாதார- சமூக கட்டமைப்பை புரிந்துகொள்ள போர்த்துகீசிய ஆவணங்கள் உதவுகின்றன.
விஜயநகர அரசின்போது இருந்த சிறு மற்றும் குறுநில நாயக்கர்களின் ஆட்சிகள் போன்றவற்றை உலகளாவிய பார்வையில் பதிவு செய்திருக்கிறார், நுாலாசிரியரும், இந்திய-ஐரோப்பியவியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனருமான எஸ்.ஜெயசீல ஸ்டீபன்.
செறிவானதொரு ஆங்கிலப் பதிப்பை நீரோட்டத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் ரகு அந்தோணி.
16ம், 17ம் நுாற்றாண்டு காலத்து வட தமிழகத்தின் பொருளாதாரம் மற்றும் அரசியல் செயல்பாடுகள் குறித்து படம் பிடிக்கிறது.
உலக வரலாற்றில் இது ஒரு சிறு வரலாற்றுக் காலம் என்றாலும், நெடிய வரலாற்றோடு பொருத்திப் படிக்கும் வகையில் செறிந்த தகவல்கள் மண்டிக் கிடக்கின்றன.
கி.பி., முதலாம் நுாற்றாண்டிலேயே பெருமளவு கடல் வணிகம் நடைபெற்ற தமிழகத்தில், காவிரிப்பூம்பட்டினம் போன்ற பல்வேறு கடற்புற நகரங்களில் வர்த்தகம் நடைபெற, உள்நாட்டுப் பகுதிகளில் ரோமானியர் வர்த்தகம் நடைபெற்றதும் அறியப்படுகிறது.
பத்தாம் நுாற்றாண்டு வரை துறைமுக நகராக விளங்கிய மகாபலிபுரம், பிற்பாடு நாகப்பட்டினம் அதிகாரபூர்வ துறைமுகமான பின் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டதும், பர்மாவுடன் குலோத்துங்க சோழனுக்கு இருந்த தொடர்புகள்...
சோழ மண்டலத்தில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம், பல்லவர்கள் வளர்த்த தென் கிழக்கு ஆசிய கடல் வழித் தொடர்புகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது.
சோழ மண்டலத்தில், 17ம் நுாற்றாண்டில் டச்சு மற்றும் பிரெஞ்சு, ஆங்கிலேயர், சோழ மண்டலத்தில் நுழைந்த முறை போன்ற வரலாற்றுத் தகவல்களை படித்துணர முடிகிறது.
இறையாண்மை, வருவாய் வசூல் முறைகள், சோழ மண்டல நிலவளங்கள், பயிர் வகைகள், நீர் மேலாண்மை, வரி விதிப்புகள், தறி வரிகள், அபராதங்கள் போன்றவை விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அத்தியாயத்தின் கீழும் கொடுக்கப்பட்டுள்ள நுாற்றுக்கணக்கான அடிக்குறிப்புகள், ஆய்வின் அடர்த்தியை கட்டியம் கூறுகின்றன. வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள் படிக்க வேண்டிய நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு