கன்னியாகுமரி என்றவுடன் அங்கு சென்றுவந்தோருக்கெல்லாம், ‘பவுர்ணமி நாள் மாலையில் ஒரே நேரத்தில் ஒரு பக்கம் சந்திரோதயமும், மறுபக்கம் சூரிய அஸ்தமனமும் காட்சி கொடுக்கும்’ வியத்தகு நிகழ்வு நினைவுக்கு வரும்.
அவ்வற்புதக் கடலின் கரையில் தவக்கோல நாயகியாக பகவதி அம்மன் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளாள்.
குமரி, குமரி நீராடல் என்றெல்லாம் தொல் பழம் இலக்கியங்களில், தலப் பெயரும், தீர்த்தாடனச் சிறப்பும் வருதலால், அக்காலங்களில் குமரிக் கோவில் மரத்தாலும், சுதையாலும் ஆனதாக இருந்திருக்கும். இக்கோவில் இன்றைய நாளில் எழிலார் கற்கோவிலாக இலங்குகிறது.
இங்குள்ள கல்வெட்டுகளில், பாண்டியன் மாறன்சடையனின் கல்வெட்டே பழமையானது. முதல் ராஜராஜனின் கல்வெட்டும் குறிப்பிடத்தக்கது.
இவற்றைக் கொண்டு எட்டாம் நுாற்றாண்டில், மாறன் சடையன் இக்கோவிலைக் கற்றளியாக்கினான் என்றும், முதல் ராஜராஜன் என்னும் சோழ அரசன் இக்கோவிலைப் புதுப்பித்து விரிவுபடுத்தினான் என்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர்.
இச்செய்திகளையும் கோவில் அமைப்புப் பற்றியும் முதல் இரு தலைப்புகளுள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
கோவில் அமைப்பில் கருவறை அர்த்த மண்டபம் முதலிய, 51 இடங்களை நம் கண் முன் காட்சிப்படுத்துவதுடன், வரைபடம் ஒன்றின் வழி அவ்விடங்களையும் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.
பூஜைகள் செய்வதற்கான தொகைகளை பார்க்கும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது. கன்னிகளை வைத்து உணவளிக்கும் நிகழ்வுக்கு, 22 ரூபாய் பெறுகின்றனர்.
இதுபோன்ற செய்திகள் எழுதும் பத்தியில் எந்த ஆண்டில் என்பதையும் குறித்திருக்க வேண்டும்.
அருஞ்சொற்பொருள் அகராதி, வரைபடம், புகைப்படங்கள் (33) ஆகியவை இந்நுாலாசிரியரின் பேருழைப்பின் சான்றுகளாக உள்ளன.
தொல் பழங்காலங்களில் பிடாரி கோவிலாக பேசப்பட்டு, ஆறாம் நுாற்றாண்டு முதல் கன்னியாகுமரிக் கோவிலாக பேர் பெற்று விளங்கும் பகவதி அம்மன் கோவிலுக்கு, இந்நுாலாகிய எழுத்தாராதனை செய்த பேரா., சி.பிரதாபசிங் பாராட்டத்தக்கவர் ஆவார்.
– ம.வே.பசுபதி