‘இந்தப் புதிய தலைமுறையினருக்கு பேனா கொடுக்கப்படவில்லை என்றால் தீவிரவாதிகளால் அவர்களுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுவிடும்!’ என, பெண் கல்விப் போராளி மலாலாவின் சரிதம் முரசடிக்கிறது!
தலிபான்கள் பிற்போக்குவாதிகள். பெண்கள் கல்வி பெறுவதை வெறுப்பவர்கள்.
பெண் பிள்ளைகளை பள்ளிக்குச் செல்ல விடுங்கள். பள்ளிகளை மூடாதீர்கள். பெண் கல்வியின் பொருட்டு நடத்தி வரும் பெருங்கொடுமைகளை நிறுத்துங்கள் என, தலிபான்களுக்கு எச்சரிக்கை மணி அடித்துக் காட்டியவர் மலாலா.
கடந்த, 2009ம் ஆண்டிலேயே, பி.பி.சி.,யின் உருது வலைப் பதிவு ஊடாக, தானும் தன் ஊரும் பாகிஸ்தானிய தலிபான்களால், எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை, மலாலா விவரித்து வந்தார்.
எப்போதும் அமைதி விரும்பியான, மலாலா தாம் வசிக்கும் பகுதியில், பெண்கள் பாடசாலை செல்வதற்கான தலிபான்களின் தடையை மீறி, பள்ளி சென்று வந்த ஒரே காரணத்திற்காக, அவரைக் கொல்ல முயன்றனர். ஆனால், கடவுள் அவரைக் காப்பாற்றி விட்டார்.
உலக நாடுகள் பலவற்றிலும் மலாலா ஏற்படுத்திய தாக்கம் நிலை கொண்டுள்ளது. தீவிரவாதத்தால் கல்வியை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்பதற்கு, வாழும் முன்னுதாரணமாகத் திகழ்வதை இந்த நுாலில் காணலாம்.
– எஸ்.குரு