நுாலைப் படிக்கத் துவங்கும் முன், ‘எட்டாம் பதிப்பு’ என்பதை கண்ணுற்ற என் கண்கள் அகல விரிந்தன. நம் நாட்டின் முதுகெலும்பாம் விவசாயிகளின் வாழ்வோடு இரண்டறக் கலந்த பசு மாடுகளின் வளர்ப்பு குறித்து, நுட்பமான அரிய பல கருத்துகளைத் தாங்கியுள்ள இந்நுால் இன்னும் பல பதிப்புகளைக் காணும் என்பதில் ஐயமில்லை.
பால் உணவின் முக்கியத்துவம், பாலின் குணங்கள், பாலைப் பதப்படுத்துதல், பால் பொருட்கள் தயாரிப்பு முறை போன்றவற்றை விரிவாக விவரிக்கும் இந்நுால், பசுக்களுக்கு வரும் நோய்கள், அவற்றைக் கண்டறியும் முறை, முதலுதவி, பசுக்களைப் பாதுகாக்கும் முறை, கால்நடை வளர்ப்போர் தினமும் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் என அனைத்தையும் மிக எளிய நடையில் அடிப்படைக் கல்வி பயின்றோரும் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் கேள்வி – பதில் வடிவில் நுாலை அமைத்துள்ளார் நுாலாசிரியர்.
பால் விவசாயிகளுக்கு வழிகாட்டியாகவும், பண்ணையாளர்களுக்கு பயனுறு வகையிலும் அமைத்துள்ள இந்நுால், கால்நடை மருத்துவ மாணவர் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நுால்.
–புலவர் சு.மதியழகன்