மார்க்சியக் கண்ணோட்டத்தில், இந்தியாவில் தோன்றிய வேதம், உபநிடதம், புராணம், ஜெயினம், பவுத்தம் ஆகிய மதக் கருத்துகளை மறுக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால்.
தேசபக்த நாத்திகமாக விளங்கிய மார்க்சியத்தை இந்தியச் சூழலுக்கு ஏற்ற நெறியில் ஒப்பிட்டுள்ளார் ஆசிரியர்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசியல் ஆதிக்க காலத்தில், இந்திய மக்களிடையே பிளவுபடுத்தி, ஒருவருக்கு ஒருவரை மோத விட்டு அடக்கி அடிமைப்படுத்தினர்.
ஜேம்ஸ் ஆங்கில வரலாற்று ஆசிரியர் நாகரிகத்தை ஹிந்து, முஸ்லிம், பிரிட்டிஷ் என்று பிரித்தார் (பக்., 13) என்று அந்நியரின் பிரித்தாளும் சூழ்ச்சியை எழுதுகிறார்.
வேதங்களின் முடிவு ஆறு வகைகளில் வேதாந்தங்களாக உருவாக்கப்பட்டன; 18 வகையில் புராணங்கள் எழுதப்பட்டன. சங்கரர், ராமானுஜர், மத்வர் தோன்றினர்.
ஆழ்வார்கள், நாயன்மார்கள் பக்தி இயக்கத்தை வளர்த்தனர். பெண் தெய்வ வழிபாடுகள் தோன்றின.
கி.பி., ஆறாம் நுாற்றாண்டில், ‘தாரா’ தாரிணி வழிபாடு, துர்கா வழிபாடு வளர்ந்துள்ளது. ஜைனம், பவுத்த சமயங்கள் தோன்றி வளர்ந்தன.
மதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் நாத்திகம் தலைப்பில் வினா – விடை பாங்கில், நாத்திகம் விளக்கப் பெற்றுள்ளது.
மதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் நாத்திகம் எதிர்க்கிறது (பக்., 85). 1844ல் காரல் மார்க்ஸ் மதம் என்பது மக்களின், ‘அபின்’ என்றார். மார்க்சிய நாத்திகம் எது என்றும், இந்திய மார்க்சியம் எது என்றும் இந்நுால் விளக்கம் தருகிறது.
– முனைவர் மா.கி.ரமணன்