விறுவிறுப்பான நடையில் வாழ்க்கைச் சம்பவங்களை சுவை குன்றாமல் தரும் இந்நுாலாசிரியர், தம் வாழ்க்கை அனுபவங்களைச் சிறு சிறு துணுக்குகளாக, சிறு குறிப்புகளாகப் படைத்து அளித்துள்ளார்.
எதையும், மெல்லிய நகைச்சுவையோடு சொல்லக்கூடிய இந்த எழுத்தாளரின் சிந்தனை, பல கோணங்களில் வெளிப்பட்டுள்ளது. மேற்கோள்களாகப் பயன்படும் விதத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு கருத்தை உணர்த்திச் செல்வது, நம் சிந்தனையைத் துாண்டுவதாக உள்ளது.
‘காதலைச் சொல்லத் தான் வார்த்தை தேவை: அதைத் துய்க்க மவுனம் போதும்; எப்படிப்பட்ட ஆபத்துகளில் இருந்து இறைவன், நம்மைக் காப்பாற்றி இருக்கிறான் என்று நமக்கே தெரியாது; அவனும் சொல்லிக் காட்டுவது இல்லை.
‘எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன் – மனிதன். என்ன வேண்டுமானாலும் நடக்கும் – இயற்கை. பணம் நல்லவர்களை நல்லவர்களாக்குகிறது; கெட்டவர்களை இன்னும் கெட்டவர்களாக்குகிறது!’ இப்படி பல கருத்து துணுக்குகளை வாழ்க்கைப் பாடத்தில் இருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள முடியும் என்பதை மெய்ப்பிக்கும் நுாலாக விளங்குகிறது.
– ராம குருநாதன்