திருமந்திரம் உரைக்கும் தமிழ் மண்டலம் ஐந்து என்பதில் ஒன்றாக சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாட்டுடன், கொங்கு நாடும் கொள்ளப்படுகிறது. தனி அரச மரபு எதுவும் முழுமையாக கொங்குப் பகுதியை ஆளவில்லை.
சங்க காலத்தில் பல குறுநில மன்னர்கள் மற்றும் வேளிர் ஆண்ட பகுதிகளில், சில கொங்கு நாட்டுப் புலவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வ வளங்கள் பொருந்திய கொங்கு நாட்டின் மீது, காலங்காலமாகப் பலரும் ஆதிக்கம் செலுத்தியதில் வியப்பேதுமில்லை.
பாலக்காட்டுக் கணவாய் வழியாக ரோமானிய வாணிகம் செழித்திருந்ததற்கு அடையாளங்களாக ரோமாபுரி நாணய விபரங்களையும், கொங்கு என்று அழைத்தமைக்கான பெயர்க் காரணமும், கொங்கு நாடு, 24 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்ததையும், பின் அவை, 42 நாடுகளாகப் பிரித்து ஆளப்பட்டமையும், நாட்டார்கள் ஆண்டமையும் முன்னுரையில் அறியலாம்.
கொங்கு வேளாளர் தலைவர்களுக்கு அரசர்கள் வழங்கிய காமிண்டன் என்ற பட்டமே, பிற்பாடு கவுண்டன் என்று ஆனதாக கூறப்படுகிறது. பட்டக்காரர், பாளையக்காரர்களின் தகவல்களும், கொங்கு அறிஞர்கள் பலரின் ஆய்வுப் பணிகள், இலக்கியப் பணிகளை காணலாம்.
இவற்றின் பின்னணியில், 102 குல வரலாறுகளையும் தனித் தனியே அத்தியாயப்படுத்தி தரப்பட்டு உள்ளது. ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது.
– மெய்ஞானி பிரபாகரபாபு