பத்தொன்பதாம் நுாற்றாண்டின் துவக்கத்தில் கோவை மாவட்டத்துக்கு உட்பட கிராமமாக இருந்த ஈரோடு, 1979ல் மாவட்ட நிலைக்கு உயர்ந்தது. தமிழகத்தின் சிறு பிரிவுகளில் ஒன்றாக விளங்கியது கொங்கு நாடு.
இந்த கொங்கு நாட்டை நான்கு திசைகளின் அடிப்படையில் நான்கு பிரிவாகப் பிரித்திருந்தனர். அவற்றில் தெற்குக் கொங்குப் பகுதியையும் வடக்குக் கொங்குப் பகுதியையும் உள்ளடக்கியது இந்த ஈரோடு மாவட்டம்.
பெருங்கற்காலம் துவங்கி ஈரோட்டுப் பகுதியில் மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குக் கொடுமணல் அகழாய்வை எடுத்துக் காட்டியுள்ளார் புலவர் செ.ராசு. சங்க காலம், கங்கர் காலம், சேரர் காலம் ஆகியவற்றில் ஈரோடு எவ்வாறு இருந்தது என்பதையும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இந்நுால் தெரிவிக்கிறது.
ஈரோட்டுப் பகுதியில் மக்கள் பின்பற்றும் சமயங்கள், செய்யும் தொழில்கள், வாணிகம் முதலான தகவல்கள் தனித்தனி அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளன. மேலும், ஈரோட்டுப் பகுதியில் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் பற்றியும், தலைவர்கள் பற்றியும் தெரிவிப்பதுடன் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்களின் நிழற்படங்களையும், கல்வெட்டு
களின் நிழற்படங்களையும் கொடுத்து இந்த நுாலில் வழங்கப்பட்ட தகவல்களுக்குத் துல்லியத் தன்மையைக் காட்டியுள்ளார் ஆசிரியர். ஈரோடு மாவட்டம் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு மிகவும் பயனுடைய நுால்.
– முகிலை ராசபாண்டியன்