‘பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா’ என்று பாடிய பாரதியை ஆச்சரியக் குறியாகக் காட்ட, 102 கேள்வி கேட்டு விடை கூறி விளக்கியிருக்கிறார் அவ்வை அருள்.
தாத்தா துரைசாமியின் மேதைமையும், தந்தை நடராசரின் அறிவாண்மையும் அருளின் திறமையில் ஒளிர்கிறது. பாரதியின் வாழ்வு, கவிதை, சீர்திருத்தம், போராட்டம் ஆகிய பதிவுகள், விடைகளில் விதைகளாய் புதைந்து உள்ளன.
‘பாரதி சின்னப் பயல்’ என்ற ஈற்றடி வெண்பா எழுதிய சூழல், பாரதி கடிதங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், உரைநடை தமிழ்க் கல்வி போன்றவை சிறப்பாக விளக்கப்பட்டு உள்ளன.
பாரதியைப் பின்பற்றுவோருக்கு அவர் சொன்ன, 10 கட்டளைகள், பாரதியைப் போற்றிய பரம்பரைக் கவிஞர்கள் சுத்தானந்த பாரதியார், கவிமணி, நாமக்கல் கவிஞர், பாவேந்தர் போன்றோர் பாடல் வரிகளைத் தந்துள்ளமை படிப்போரை துடிப்புடன் ரசிக்க வைக்கும்.
‘தவம் செய்த தவமாக வந்த தேசிய சிகரம்’ என்று கவியோகி சுத்தானந்த பாரதியார் பாடியது, பலரும் அறியாத ஒரு புதையல்.
‘கண்ணாலம்’ என்ற வழக்குச் சொல்லை பெரியாழ்வார் யசோதை கண்ணனிடம் கூறுவதாகப் பாடிய பிரபந்தத்தை, ‘பிறன் கண்ணாலம் செய்து விட்ட பெண்ணை’ என்று பாரதியாரும் எடுத்தாண்டுள்ளதை (பக். 96) ஆய்வு நோக்கில் அழகுறக் காட்டியுள்ளார்.
எழுத்துப் பிழைகள் இன்றைய பாடநுாலில், வினாத் தாளில் தவறாது வந்து அமர்வது போல், மிக அதிக பிழைகள் நுாலில் உள்ளன. பதிப்புரையில், ‘சொல்லருளை’ பக்., 2ல் ‘நாதனப்’ ‘பையல்’ இவற்றை களைய வேண்டும். வினா விடையில் பாரதி பாடநுால்.
– முனைவர் மா.கி.ரமணன்