ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பின்னால் ஒரு ரகசிய உலகம் இயங்கி வருகிறது. அவற்றை வெளியில் சொல்ல முடியாமல் தவித்த காலங்கள் சென்று, புதுப்புது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரத்தை வைத்து, சாமானியர் பலரும் சமூக வலைதளங்களைக் கொண்டாடுகின்றனர்.
ஆனால், பதிவிடப்படும் அரிய தகவல்கள் முதல், அந்தரங்க பதிவுகள் வரை, அனைத்தும் ரகசியமாகக் கூகுளின் கழுகுப்பார்வையால் கண்காணிக்கப்படுகின்றன.
இலவசச் செயலி என்றதும் இறக்கி எடுத்துக் கொள்வதும், ஆசை வார்த்தைக்கெல்லாம், ‘ஆமாம்’ போட்டு நட்பை கெட்டியாக்கிக் கொள்வதும், நேரில் பார்க்காமலே நேசம் கொட்டுவதும், தன்னை இழப்பதும் இன்றைய நடைமுறை.
எத்தனையோ அபூர்வங்களை உள்ளடக்கிய வலைதளங்கள், என்னென்னவோ ஆபத்துகளையும், அச்சுறுத்தல்களையும் கொண்டதாக இருப்பது சாமானியர்களுக்குத் தெரிவதில்லை.
நுாலாசிரியர், அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையிலான தேர்தல் தொடர்பான முகநுால் மோசடிகளை விவரித்து, முகநுாலார்களின் தகவல்களைக் கவர்ந்து நிகழ்த்தப்பட்ட மகா ஊழலைப் பகிரங்கப்படுத்துகிறார்.
கடந்த, 21ம் நுாற்றாண்டில் மக்களின் உணர்வுகளின் மீது பெருநிறுவனங்களும், அரசுகளும் மறைமுக உளவியல் தாக்குதல் நடத்திப் பகடைகளாக உருட்டும் சூழல்களின் விபரம் மனதில் விழிப்பு மணியடிக்கும்.
ஆவக்காய் முதல் அண்டார்டிகா வரை அனைத்தும் அறிந்துவிட்டதாக அறிவுஜீவிகள் போல் தீவிரமாகப் பதிவுகள் செய்து, வலைதள வலைக்குள் சிக்கிய சராசரி பேதைகளின் மனநிலையை மாற்றி தம் வயமாக்கும் வல்லுாறுகளை இனம் காட்டுகிறது.
– மெய்ஞானி பிரபாகரபாபு