அத்தி வரதர் வரலாறு என்ன? 40 ஆண்டுகளாக, ஏன் தண்ணீருக்குள் இருக்கிறார்? என, ‘காலச்சக்கரம்’ நரசிம்மா, 40 ஆண்டுகளாக திரட்டிய ஆய்வறிக்கை, சுவைபட, சுவாரஸ்யம் குன்றாமல், ‘அத்திமலைத் தேவன்’ என்ற நாவலாக வெளிவந்திருக்கிறது.
கோவில்கள் நகரமான காஞ்சியில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலின், ஆனந்த புஷ்கரணியில் இருந்து, அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம், தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நேரத்தில், அத்திவரதர் பற்றிய புத்தகம் வெளிவருவது, கூடுதல் சிறப்பு.
‘எவ்வளவு நிகழ்வுகள், பெருமைகள், கொடுமைகள், சிறுமைகள், மர்மங்கள் என, அனைத்தையும் கடந்து, அத்தி வரதர்
தண்ணீருக்குள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்’ என, நுாலாசிரியர் கூறுவது, முற்றிலும் உண்மையே.
அஸ்வத்தாமா, தன் இரு மகன்களில் ஒருவனை, வேமுலபுரியில் விட்டுச்செல்கிறான். அவன், புலி வேமு மன்னனாக உருவெடுத்து, பல்லவ வம்சத்தை தோற்றுவிக்கிறான்.
தொண்டை நாட்டை விரிவு செய்து, காஞ்சிவனம் என்ற அத்திவனத்தை, தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருகிறான், புலி வேமு.
தன் சித்தி மகன், பரப்ப சுவாமியை, அத்திவனத்தின் தலைவனாக நியமிக்கிறான். அவன், அத்திவனத்தில் உள்ள, அத்திமலைத் தேவனின் ரகசியத்தை அறிவதற்கு முற்படுகிறான் என, துவங்கும் நாவல், பல்வேறு அரசியல் சதிகள், துரோகம், அவமானம், பழிவாங்குதல், புத்தர் என, விறுவிறுப்பாக செல்கிறது.
அத்தி மரம் என்பது ‘‘எப்போதும் கனிகளைத் தாங்கி நிற்கும்; விஷங்களை முறித்து. உக்கிரங்களை தணிக்கும்’ என்ற கடவுள் மகாலட்சுமி கருத்து இந்த நுாலில் உள்ள தகவல். அதிலும் நீரும் அத்திமரமும் சேரும் போது அதிக ஆற்றல் வரும் என்பது மற்றொரு சிறப்பு.
ஆகவே அத்தி வரதர் இப்போது அனுக்கிரகம் தரும் நேரத்தில், வாசகர்கள் இந்த நாவலைப் படிக்க விரும்புவர். காஞ்சி அத்தி வரதர் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு காலத்தில் பாதுகாப்பாக தண்ணீருக்கு அடியில் நீண்ட காலம், வசிக்க வேண்டிய காலம் இருந்தது வேறு விஷயம்.
சரித்திரத்தோடு, ஆன்மிகம் கலந்த, சுவாரஸ்யம் நிறைந்த மர்ம நாவல். சரியான நேரத்தில் வெளிவந்திருக்கும் இந்நுால், வாசகரிடையேயும் வரவேற்பை பெறும் என்பதில், சந்தேகம் ஏதுமில்லை.
– சி.கலாதம்பி